நம்முடைய அன்றாட வாழ்வில் நமக்கு தேவையான அனைத்து சத்துகளும் நிறைந்த உணவுப்பொருட்கள் பல இருக்கின்றன. அந்த உணவுப் பொருட்களை முறையாக நாம் உட்கொள்ளும் பொழுது நம்முடைய உடல் ஆரோக்கியமாக திகழும். அந்த வகையில் இன்று ஆரோக்கியமான உணவு பட்டியலில் நாம் பார்க்கப்போவது வெள்ளைப் பூசணிக்காய். இந்த வெள்ளை பூசணிக்காயை வைத்து எப்படி அல்வா செய்வது என்று தான் சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடிய ஒரு பொருளாக வெள்ளைப் பூசணிக்காய் திகழ்கிறது. இதை முறையாக நாம் உட்கொள்ளும் பொழுது வயிற்றில் இருக்கக்கூடிய புண்கள் ஆறும். கெட்ட கொழுப்புகள் கரைக்கப்படுகிறது. ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இதோடு நாம் பனங்கற்கண்டை சேர்த்து செய்வதால் பனங்கற்கண்டும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. மேலும் கர்ப்பிணி பெண்களும், சர்க்கரை நோயாளிகளும் இந்த அல்வாவை எந்தவித தயக்கமும் இன்றி சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
- வெள்ளை பூசணி – 1/4 கிலோ
- பனங்கற்கண்டு – 1/4 கிலோ
- நெய் – 3 டேபிள்ஸ்பூன்
- முந்திரி – 25 கிராம்
- வெள்ளரிக்காய் விதை – 10 கிராம்
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்றுங்கள், நெய் உருகியதும் அதில் முந்திரி, வெள்ளரிக்காய் விதை இவற்றை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் நெய்யில் துருவிய பூசணிக்காயை சேர்த்து வதக்க வேண்டும். இது ஏற்கனவே நீர்ச்சத்து மிகுந்தது என்பதால் அந்த நீரே பூசணிக்காய் வேக வைப்பதற்கு போதுமான அளவாக இருக்கும்.
அல்வா கலராக வரவேண்டும் என்று நினைப்பவர்கள் இதில் கேசரி பவுடரை கலந்து கொள்ளலாம். ஒரு தட்டை போட்டு மூடி வைத்து பூசணிக்காயை வேக வைக்க வேண்டும். பூசணிக்காய் நன்றாக வெந்த பிறகு அதில் பனங்கற்கண்டை சேர்த்து வதக்க வேண்டும். பனங்கற்கண்டு கரைய ஆரம்பிக்கும் பொழுது ஒரு ஸ்பூன் நெய்யை அதில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
பனங்கற்கண்டு முழுவதும் நன்றாக கரைந்து அல்வா பதத்திற்கு வரும்பொழுது வறுத்து வைத்திருக்கும் முந்திரி, வெள்ளரி விதை இவற்றை அதில் சேர்த்து மீதம் இருக்கும் ஒரு ஸ்பூன் நெய்யை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். விருப்பம் இருப்பவர்கள் இதில் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கொள்ளலாம். நெய் நன்றாக பிரிந்து வரும் நேரத்தில் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். மிகவும் சத்து மிகுந்த ஆரோக்கியமான இனிப்பான பூசணிக்காய் அல்வா தயாராகி விட்டது. இந்த அல்வாவை தான் நாம் காசி அல்வா என்று கூறுகிறோம்.
இதையும் படிக்கலாமே: ராஜஸ்தான் ஸ்பெஷல் கொண்டை கடலை பர்பி செய்முறை
பனங்கற்கண்டும் பூசணிக்காயும் பல மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களாக கருதுவதால் இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எந்த தயக்கமும் இன்றி சாப்பிடலாம்.