தானியங்களை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பொதுவாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு கொண்டைக்கடலையை நாம் ஊறவைத்து தருவதன் மூலம் அவர்களின் உடல் மிகவும் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் திகழும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. அப்படிப்பட்ட கொண்டைக்கடலையை வைத்து பர்பி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றல் அதிகரிக்க உதவுகிறது. மேலும் கொண்டைக்கடலையில் மக்னீசியம், தயமின், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற கனிம சத்துக்களும் இணைந்திருக்கின்றது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாக கருதப்படுகிறது. மேலும் இதில் நார்ச்சத்து, புரோட்டின், இரும்புச்சத்து நிறைந்து இருக்கிறது. ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை தடுப்பதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றம் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது. இது கெட்ட கொழுப்பை குறைக்க உதவுவதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அதோடு மட்டுமல்லாமல் இதில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்தசோகை ஏற்படாமல் தடுப்பதோடு மட்டுமல்லாமல் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
தேவையான பொருட்கள்
- வெள்ளை கொண்டை கடலை – 200 கிராம்
- நெய் – 120 கிராம்
- பொடித்த சர்க்கரை – 120 கிராம்
- பாதாம் பருப்பு – 10
- ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்
- குங்குமப்பூ – சிறிதளவு
செய்முறை
முதலில் கொண்டைக்கடலையை ஒரு கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கொண்டைக்கடலை ஆரிய பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் அரைத்து வைத்திருக்கும் கொண்டை கடலையை சேர்த்து அதனுடன் பொடித்து வைத்திருக்கும் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
பிறகு நெய்யை உருக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். உருகிய நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு இந்த மாவை பிணைந்து கொள்ள வேண்டும். நெய் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். இதை நன்றாக பிணைந்த பிறகு ஒரு அகலமான தட்டில் நமக்குத் தேவையான அளவு கனத்தில் அதை பரப்பி கொள்ள வேண்டும்.
பிறகு அதற்கு மேல் துருவி வைத்திருக்கும் பாதாம் பருப்பு, ஏலக்காய் தூள், குங்குமப்பூ இவை அனைத்தையும் நன்றாக தூவி ஆர வைக்க வேண்டும். இவை லேசாக சூடாக இருக்கும் பொழுது ஒரு கத்தியை பயன்படுத்தி நமக்கு தேவையான வடிவத்தில் அதை நறுக்கி வைத்து விட வேண்டும். அவ்வளவுதான் மிகவும் சத்தான சுவையான கொண்டைக்கடலை பர்பி தயாராகி விட்டது.
இதையும் படிக்கலாமே: சத்துக்கள் நிறைந்த அத்திப்பழ அல்வா செய்முறை
ஆரோக்கியமான பொருட்களை பயன்படுத்தி நாம் ஸ்நாக்ஸ் தயார் செய்து குழந்தைகளுக்கு தருவதன் மூலம் அவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.