இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு விதவிதமாக நாம் சட்னி செய்து கொடுத்தாலும் இட்லி பொடி இருந்தால் ஒரு தோசைக்கு பதிலாக இரண்டு தோசையாக சாப்பிடுவார்கள். இரண்டு இட்லிக்கு பதிலாக மூன்று இட்லியாக சாப்பிடுவார்கள். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பொருந்தும். அப்படி நாம் இட்லி பொடியை கொடுக்கும் பொழுது வீட்டிலேயே தயாரிக்க கூடிய ஆரோக்கியமான இட்லி பொடியாக இருக்கும் பட்சத்தில் அவர்களை அறியாமலேயே ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உண்பதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் ஆளி விதையை வைத்து இட்லி பொடி செய்வது எப்படி என்று தான் பார்க்கப் போகிறோம்.
ஆளி விதையில் விட்டமின் இ, ஒமேகா 3, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், புரதச்சத்து போன்ற பல சத்துக்கள் இருக்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் இந்த ஆளி விதையை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய், மலச்சிக்கல், மாரடைப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் வருவதை தடுக்கிறது. மூட்டு வலி குறைய ஆரம்பிக்கிறது. இதோட மட்டுமல்லாமல் நம் சருமமும் கூந்தலும் மிகவும் ஆரோக்கியமாக திகழும்.
தேவையான பொருட்கள்:
- கடலை பருப்பு – 1/4 கப்
- கருப்பு உளுந்து – 1/4 கப்
- ஆளி விதை – 1/2 கப்
- காய்ந்த மிளகாய் – 10
- கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
- எள்ளு – 2 டேபிள் ஸ்பூன்
- புளி – ஒரு எலுமிச்சை பழ அளவு
- பெருங்காயம் – 1/2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். கடாய் நன்றாக சூடானதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து கடலைப்பருப்பை முதலில் சேர்த்து நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் அதே கடாயில் கருப்பு உளுந்தை போட்டு நன்றாக வறுத்து அதையும் ஆரவைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக ஆளி விதையை சேர்த்து வறுக்க வேண்டும். ஆளி விதை வெடிக்க ஆரம்பித்ததும் அதையும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். கருப்பு எள்ளையும் வறுத்து அதையும் ஆரவைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுக்க வேண்டும். காய்ந்த மிளகாய் சிவந்த பிறகு அதில் புளியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். கடைசியாக கருவேப்பிலையும் அதில் சேர்த்து வறுத்துவிட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
இப்பொழுது கடலை பருப்பையும் கருப்பு உளுந்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஆளிவிதையும் கருப்பு எள்ளையும் சேர்த்து அதையும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது தேவையான அளவு உப்பையும் அதில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
கடைசியாக காய்ந்த மிளகாய், புளி, கருவேப்பிலை, பெருங்காயத்தூள் இவற்றை சேர்த்து நன்றாக அரைத்து அதையும் நாம் ஏற்கனவே கலந்து வைத்திருக்கும் பொடியில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் மிகவும் ஆரோக்கியமான ஆளி விதை இட்லி பொடி தயாராகிவிட்டது. இதில் நாம் கருப்பு எள், கருப்பு உளுந்து சேர்த்திருப்பதால் இதுவும் அதிக அளவு கால்சியம் சத்து நிறைந்தது என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்ல சத்தான ஒரு இட்லி பொடியாக இது திகழும்.
இதையும் படிக்கலாமே: ஆரோக்கியமான கேரட் புட்டிங் செய்முறை
பத்து ரூபாய் கொடுத்து கடையில் இருந்து இட்லி பொடி வாங்கி சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய ஆரோக்கியத்தை விட இப்படி நாமே நம் கைகளால் ஆரோக்கியம் மிகுந்த பொருட்களை சேர்த்து செய்வதன் மூலம் நம் குடும்பமும் ஆரோக்கியமாக இருக்கும்.