நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பலரும் விரும்பி உண்ணும் உணவுப் பொருளாக திகழ்வதுதான் தோசை. தோசையில் பல வகைகள் இருக்கின்றன. கடைக்கு செல்லும் பொழுது பல வகைகளில் தோசைகளை வாங்கி சாப்பிடும் பழக்கமும் இருக்கிறது. ஒரே ஒரு தோசை மாவை வைத்து நாம் விதவிதமாக பல தோசையை செய்ய முடியும். அந்த வகையில் வாழைப்பூவை வைத்து தோசை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
நம்முடைய உடலுக்கு தேவையான சுவைகளில் மிகவும் முக்கியமான சுவை துவர்ப்பு சுவை. இந்த துவர்ப்பு சுவை அதிக அளவில் இருக்கக்கூடிய உணவுப் பொருளாக வாழைப்பூ திகழ்கிறது. வாழைப்பூவில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது மலச்சிக்கல், குடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. இதில் அதிக அளவு துவர்ப்புச் சத்து இருப்பதால் பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகவும் திகழ்கிறது.
தேவையான பொருட்கள்
- தோசை மாவு – ஒரு கப்
- வாழைப்பூ – 1/2 கப்
- வெங்காயம் – 1/4 கப்
- தக்காளி – 1/4 கப்,
- சீரகம் – 1 டீஸ்பூன்
- சோம்புத்தூள் – 1 டீஸ்பூன்
- இஞ்சி – ஒரு சிறிய துண்டு
- பூண்டு – 5 பல்
- பச்சை மிளகாய் – 2
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
- தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
- சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சிறிது தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சீரகம் போட வேண்டும். சீரகம் பொரிந்த பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
பூண்டு நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளியும் நன்றாக வதங்கிய பிறகு வேக வைத்திருக்கும் வாழைப்பூவை சேர்த்து வதக்க வேண்டும். வாழைப்பூ லேசாக வதங்கிய பிறகு சோம்புத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் இவை அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிட வேண்டும்.
இவை அனைத்தும் நன்றாக வெந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி விட வேண்டும். இப்பொழுது தோசை கல்லை அடுப்பில் வைத்து தோசை ஊற்றி அதற்கு நடுவில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் வாழைப்பூ மசாலாவை போட்டு நன்றாக பரப்பி விட வேண்டும். பிறகு ஒரு மூடியை வைத்து தோசையை மூடி வைத்து வேக விட வேண்டும். தோசை நன்றாக வெந்த பிறகு அதை மடித்து பரிமாறி விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: வெள்ளை சோள ரொட்டி செய்முறை
சாதாரண மசால் தோசை செய்வதற்கு பதிலாக ஆரோக்கியமான வாழைப்பூ மசால் தோசையை செய்யலாம்.