தமிழர்களின் மதிய உணவில் கண்டிப்பான முறையில் இடம்பெறக்கூடிய ஒன்று என்று சொன்னால் அதுதான் ரசம். ரசம் பல வகைகளில் வைப்போம். தக்காளி ரசம், எலுமிச்சை ரசம், பருப்பு ரசம், புளி ரசம் என்று சைவத்திலும் நாட்டுக்கோழி ரசம், நெஞ்செலும்பு ரசம் என்று அசைவத்திலும் நாம் பல ரச வகைகளை வைப்போம். ஒவ்வொரு ரசமும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ரசத்தை பெரும்பாலும் பலரும் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் டம்ளரில் ஊத்தி குடிக்கும் வழக்கமும் வைத்திருப்பார்கள். ரசத்தை நாம் மதிய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஜீரண சக்தி என்பது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இதில் சேர்க்கப்பட்டிருக்கும் சீரகம், மிளகு மருத்துவ குணம் அதிகம் கொண்டவை என்பதால் உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு கூட முதலில் ரச சாதத்தை தான் தருவார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த ரசத்தை எப்போதும் போல் செய்யாமல் சற்று வித்தியாசமாக தேங்காய் பாலை வைத்து செய்யும் பொழுது அதன் சுவை வித்தியாசமாகவும் அதேசமயம் மற்ற ரசங்களை விட அதிக அளவு சுவையுடனும் திகழும். அப்படிப்பட்ட தேங்காய் பால் ரசத்தை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் – 1/2 மூடி
- தக்காளி – 1
- எலுமிச்சம் பழம் – 1
- காய்ந்த மிளகாய் – 7
- பூண்டு – 7 பல்
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- கொத்தமல்லி நறுக்கியது – ஒரு கைப்பிடி
- சீரகம் – 1 டீஸ்பூன்
- மிளகு – 1 டீஸ்பூன்
- கருவேப்பிலை – ஒரு கொத்து
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தேங்காய் பாலை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக மறுபடியும் மிக்ஸி ஜாரை எடுத்து ரசத்திற்கு அரைப்பதற்கு தக்காளி, ஐந்து காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம், மிளகு இவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த இந்த விழுதை நாம் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலுடன் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அந்த கடாய் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகைப் போட்டு வெடிக்க விட வேண்டும். கடுகு வெடித்ததும் இரண்டு காய்ந்த மிளகாய் போட்டு கருவேப்பிலையும் போட்டு கருவேப்பிலை பொரிந்ததும் நாம் கலந்து வைத்திருக்கும் தேங்காய் பாலையும் அதில் ஊற்ற வேண்டும்.
மற்ற ரசங்களைப் போலவே இந்த தேங்காய் பால் ரசத்தையும் கொதிக்க விடக்கூடாது. லேசாக நுரை கூட்டியதும் அடுப்பை அணைத்துவிட்டு பிறகு தான் எலுமிச்சம் பழச்சாறையும், உப்பையும் சேர்க்க வேண்டும். இவை இரண்டையும் சேர்த்து விட்டு பிறகு கொத்தமல்லி தலையை தூவி ஒரு முறை கரண்டியை வைத்து கலந்து மூடி வைத்து விட வேண்டும். அவ்வளவுதான் தேங்காய் பால் ரசம் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: வீட்டிலே சுலபமாக பட்டர் பன் செய்முறை
மிகவும் எளிதில் தயார் செய்யக்கூடிய இந்த தேங்காய் பால் ரசத்தை ஒரு முறை நீங்களும் வீட்டில் செய்து அனைவருடனும் உண்டு மகிழுங்கள்.