நம்முடனே நம்மை விட்டு இணைபிரியாமல் இருக்கக்கூடிய ஒன்று என்றால் அது நம்முடைய நிழல்தான். நம் கண்ணிற்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் நிழல் என்பது நம்முடனே இருக்கும். நாம் என்ன செய்தாலும் அதுவும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, பலனும் இன்றி செய்யும். அவ்வளவு அற்புதமான ஒன்றாக திகழக்கூடிய நிழலை தான் சாயாதேவி என்று கூறுகிறோம். இந்த சாயாதேவியை நாம் எப்படி தீபமேற்றி வழிபட்டால் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சூரிய பகவானின் மனைவியாக திகழக் கூடியவர் தான் சாயாதேவி. மேலும் சூரிய பகவானுக்கும் சாயாதேவிக்கும் பிறந்தவராக தான் சனிபகவான் திகழ்கிறார். இது பலரும் அறிந்த உண்மையே. இந்தச் சாயாதேவிக்கு என்று தனியாக எந்த ஆலயமும் கிடையாது. ஆனால் இந்த தேவியை மனதார நினைத்து வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய நிழல் போல நம் உடனே இருந்து நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிவிடுவாள் என்று கூறப்படுகிறது.
இந்த தேவியை சிவாலயத்தில் சேஷ்டா தேவி இருக்கும் இடத்தில் வீற்றிருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த தேவிக்கு என்று தனியாக சிலை வடிவம் கிடையாது. சேஷ்டா தேவி இருக்கும் இடத்தில் தான் சாயாதேவியும் இருப்பார் என்று கூறப்படுகிறது. சூரிய பகவானுக்குரிய கிழமையான ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் சேஷ்டா தேவிக்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெயை ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபமேற்றி வழிபட்டுவிட்டு நம்முடைய வேண்டுதல் என்னவோ அதை அந்த அம்மனை மனதார நினைத்துக் கூற வேண்டும்.
இப்படி கூறிவிட்டு வீடு திரும்பி சரியாக 48 நாட்களுக்குள் நாம் வேண்டிய வேண்டுதல் நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகள் நம்மை தேடி வரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த அம்மனை நாம் வழிபடுவதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய இருளை நீக்கி வெளிச்சத்தை தரக்கூடிய தெய்வமாகவும் இந்த அம்மன் திகழ்கிறார். இதோடு மட்டுமல்லாமல் இந்த அம்மனை நாம் வழிபடுவதன் மூலம் சனிபகவானின் தாக்கத்திலிருந்தும் நம்மால் வெளியில் வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஓம் சாயா தேவியே போற்றி” என்னும் மந்திரத்தை முழு மனதோடு கூறி அந்த அம்மனை மனதார நினைத்து வழிபாடு செய்தாலே அந்த அம்மனின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். இதோடு மட்டுமல்லாமல் வெப்பத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்தும் நாம் வெளிவருவதற்கு இந்த அம்மனின் வழிபாடு நமக்கு கை கொடுக்கும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர முருகன் தீப வழிபாடு
மிகவும் எளிமையான முறையில் முழு நம்பிக்கையுடன் சாயாதேவியை மனதார நினைத்து சேஷ்ட தேவிக்கு முன்பாக இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி கோரிக்கைகளை வைக்க அந்தக் கோரிக்கை விரைவிலேயே நிறைவேறும்.