ஒருவருக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என்றால் அவருக்கு செவ்வாய் பகவானால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவானால் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது அல்லது கெட்ட கிரகங்களுடன் செவ்வாய் பகவான் சேர்ந்திருக்கிறார் என்றால் அந்த ஜாதகருக்கு பண பிரச்சினைகள் ஏற்படும். அதனால் கடன் என்னும் பெரும் கஷ்டத்திற்குள் மாட்டி சிக்கித் தவித்துக் கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் அந்த கடன் பிரச்சினையில் இருந்து வெளியில் வருவதற்கு செய்யக்கூடிய தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
செவ்வாய் பகவானால் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அந்த பாதிப்பிலிருந்து வெளியில் வருவதற்கு செவ்வாய் பகவானுடைய அதி தேவதையாக திகழக்கூடிய முருகப்பெருமானை நாம் வழிபட வேண்டும். முருகப்பெருமானை முறையாக நாம் வழிபட்டோம் என்றால் செவ்வாய் பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கும். அந்த வகையில் செவ்வாய் பகவானால் ஏற்பட்ட கடன் பிரச்சனை நீங்க முருகப் பெருமானை எப்படி வழிபாடு செய்வது என்று பார்ப்போம்.
இந்த வழிபாட்டை தேய்பிறையில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். அதுவும் பிரம்ம முகூர்த்த வேளையில் தான் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நமக்கு புதிதாக ஆறு அகல் விளக்குகள் வேண்டும். இந்த அகல் விளக்குகளை வெறும் தரையில் வைப்பதற்கு பதிலாக மாவிலைக்கு மேலே வைக்க வேண்டும். மாவிலை கிடைக்காத பட்சத்தில் வெற்றிலையை உபயோகப்படுத்தலாம். வெற்றிலையும் கிடைக்காத பட்சத்தில் அரச இலையை உபயோகப்படுத்தலாம்.
ஆறு இலைகளை பறித்து வந்து அதை மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூஜையறையில் இருக்கும் முருகப் பெருமானின் படத்திற்கு முன்பாக வரிசையாக ஆறு இலைகளையும் வைத்து அந்த இலைகளுக்கு மேலே புதிதாக வாங்கிய அகல் விளக்கை வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த இலைகளின் நுனியானது வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும். மூன்று அகல் விளக்குகளில் நெய் ஊற்ற வேண்டும். மீதம் இருக்கும் மூன்று அகல் விளக்குகளில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும். பிறகு இதில் சிவப்பு நிற திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் அனைத்தும் வடக்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும். ஒரே நேர்கோட்டில் தீபம் இருக்க வேண்டும்.
முருகப் பெருமானுக்கு சிவப்பு நிற மலர்களைக் கொண்டு “ஓம் சரவணபவ ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி முடித்துவிட்டு அந்த நெய்வேத்தியத்தை வீட்டில் இருப்பவர்களுக்கு பிரசாதமாக தர வேண்டும். இவ்வாறு நம்பிக்கையுடன் தொடர்ந்து முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமையில் 6 தீபங்கள் ஏற்றி வழிபட நம் வாழ்வில் இருக்கக்கூடிய கடன் ரீதியான அனைத்து பிரச்சினைகளும் நீங்குவதோடு செவ்வாய் பகவானால் ஏற்பட்ட பாதிப்புகளும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே: பணம் சேர சிவ மந்திரம்
முழு நம்பிக்கையுடன் முருகப்பெருமானை மனதார நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் செவ்வாய் பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.