பணத்தை சேர்க்க வேண்டும். சேர்த்த பணத்தை வைத்து சொத்து வாங்க வேண்டும், நகை வாங்க வேண்டும், வீடு வாங்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். அப்படி வாங்கிய சொத்து, வீடு, நகை போன்றவற்றை என்றென்றும் நம்முடனே வைத்திருக்க வேண்டும். நமக்குப் பிறகு நம்முடைய சங்கதிகள் அதை வைத்து பலனடைய வேண்டும் என்றுதான் விரும்பி வாங்குவோம். ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் தங்களுடைய இக்கட்டான நிலையில் வாங்கிய இந்த பொருட்களை அடமானம் வைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்படி அடமானம் வைத்த பொருட்களை மீட்கவும், மீட்ட பொருட்களை திரும்பவும் அடமானம் வைக்காமல் இருப்பதற்கும் பைரவரை எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இடம், வீடு போன்றவற்றிற்கு அதிபதியாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் ஆறு மற்றும் எட்டாம் இடத்தில் மறைந்திருக்கும் பட்சத்தில் அவர் தன்னுடைய வீடு மனை போன்றவற்றை அடகு வைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இதே போல் நகைக்கு அதிபதியாக திகழக்கூடியவர் குருபகவான். ஒருவருடைய ஜாதகத்தில் ஆறு அல்லது எட்டாம் இடத்தில் மறைந்து இருந்தால் அந்த ஜாதகர் நகையை அடமானம் வைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து தப்பிப்பதற்கும், கஷ்டப்பட்டு திருப்பிய பொருட்கள் திரும்பவும் அடகு கடைக்கு செல்லாமல் இருக்கவும் பைரவரை வழிபடும் முறையை பார்ப்போம்.
இந்த வழிபாட்டை பௌர்ணமி நாள் அன்று தான் செய்ய வேண்டும். அருகில் இருக்கக்கூடிய பழங்கால சிவாலயத்திற்கு மாலை ஆறு மணிக்கு செல்லுங்கள். அங்கு இருக்கக்கூடிய கால பைரவருக்கு புதிதாக வாங்கிய இரண்டு அகல் விளக்குகளை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த நல்லெண்ணெயுடன் சந்தனாதி தைலம் என்று நாட்டு மருந்து கடையில் விற்கும் தைலத்தையும் சேர்த்து தீபம் ஏற்ற வேண்டும்.
வெறும் சந்தனாதி தைலத்தை மட்டும் ஊற்றி கூட தீபம் ஏற்றலாம். இப்படி தொடர்ந்து மூன்று பௌர்ணமிகள் வழிபாடு செய்ய ஆறு மற்றும் எட்டாம் இடத்தில் மறைந்திருக்கும் குரு, செவ்வாய் போன்றவர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் படிப்படியாக நீங்கி அடகு வைத்த பொருட்களை நம்மால் திருப்ப முடியும்.
நகையை அடமானம் வைத்து திருப்பி விட்டோம் என்றால் அந்த நகையை ஒரு பாத்திரத்தில் பன்னீர் தண்ணீர் இரண்டையும் ஊற்றி சிறிது பச்சை கற்பூரம், மஞ்சள் தூள் இவை இரண்டையும் சேர்த்து இதில் அடகு வைத்து திருப்பிய நகையை போட்டு விட வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரமாவது இந்த தண்ணீரில் நகை இருக்க வேண்டும். பிறகு இந்த நகையை எடுத்து சுத்தமான துணியை வைத்து துடைத்து விட்டு பூஜை அறையில் வைத்து எடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நகையில் ஏற்பட்ட தோஷம் நீங்கும். நகை மீண்டும் அடகு கடைக்கு செல்லாது.
இதையும் படிக்கலாமே: செல்வ வளம் பெருக பிரியாணி இலை பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த பைரவர் வழிபாட்டை யார் ஒருவர் முழு நம்பிக்கையுடன் செய்கிறார்களோ அவருடைய கடன் சுமை அனைத்தும் படிப்படியாக நீங்கி அடமானம் வைத்த பொருட்களை மீட்டெடுக்க முடியும்.