ஒரு சிலர் தங்களுடைய வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து அந்தப் போராட்டங்களில் தோற்று படிப்படியாக முன்னேறி வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்திருப்பார்கள். இன்னும் சிலர் எவ்வளவு போராடினாலும் அவர்களால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாத ஒரு சூழ்நிலையில் இருப்பார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள் சாதாரணமாக நடந்து செல்பவர்களுக்கு திடீரென்று கோடீஸ்வர வாழ்க்கை அமையும். இதைத்தான் நாம் அதிர்ஷ்டம் என்று கூறுவோம். இந்த அதிர்ஷ்டம் அனைவருக்கும் ஏற்பட்டு விடாது. ஒரு சிலருக்கு மட்டும் தான் ஏற்படும். அந்த அதிர்ஷ்டத்தை நாமும் பெற வேண்டுமானால் என்ன பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அதிஷ்டம் சேர எளிய முறை
அனைவரின் வாழ்க்கையிலும் அதிர்ஷ்டம் என்பது ஒரு முறையாவது கதவை தட்டும். அதை புரிந்து கொண்டு உபயோகப்படுத்தினோம் என்றால் நம்முடைய வாழ்க்கையிலும் அதிர்ஷ்டக் காற்று வீசும். பலரும் அதை புரிந்து கொள்வது கிடையாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படி நழுவ விட்ட வாய்ப்புகள் திரும்பவும் நமக்கு கிடைக்காது. அப்படி நம்மை தேடி அதிர்ஷ்டக் காற்று வீசுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பார்ப்போம்.
அதிர்ஷ்டம் நம்மை தேடி வர வேண்டும் என்றால் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நம்மை விட்டு விலக வேண்டும். இதற்கு நாம் ஒரு பரிகாரத்தை செய்யப் போகிறோம். இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு முழு தேங்காயாக ஒரு தேங்காயை வாங்கிக் கொள்ளுங்கள். அதன் குடும்பி கண்டிப்பாக இருக்க வேண்டும்.
அடுத்ததாக கடைகளில் மார்வாடி கயிறு என்று விற்கும். சிவப்பும் மஞ்சளும் கலந்த கயிறு அல்லது சிவப்பும் தங்க நிற நூலும் கலந்த கயிறு இப்படி விற்கும். இந்த கயிறை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த கயிறை தேங்காயில் ஏழு முறை சுற்றுங்கள். பிறகு இந்த தேங்காயை உங்களுடைய வலது கையில் எடுத்துக்கொண்டு கிழக்கு பக்கமாக நின்று உங்கள் உச்சம் தலையிலிருந்து உள்ளங்கால் வரை மூன்று முறை உங்களுக்கு நீங்களே திருஷ்டி சுற்றுவது போல் சுற்றிக் கொள்ளுங்கள்.
பிறகு இந்த தேங்காயை எடுத்துக் கொண்டு ஓடுகின்ற நீர் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். வேகமாக செல்லும் தண்ணீர் இருக்கும் இடத்திற்கு சென்று இந்த தேங்காயை அந்த தண்ணீரில் போட்டு விட வேண்டும். உங்கள் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை இந்த தேங்காயை நீங்கள் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த தேங்காயை நீங்கள் தண்ணீருக்குள் போடும் பொழுதும் சரி, தண்ணீரில் சென்று கொண்டிருக்கும் தேங்காய் நீங்கள் பார்க்கும் பொழுதும் சரி, அதிர்ஷ்டம் என்னை தேடி வந்துவிடும் என்று கூற வேண்டும்.
இந்த தேங்காய் அந்த தண்ணீரில் எந்த அளவிற்கு வேகமாக செல்கிறதோ அந்த அளவிற்கு அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. ஓடுகின்ற தண்ணீர் இருக்கும் இடத்தில்தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வேறு எங்கும் செய்யக்கூடாது. இப்படி தொடர்ந்து ஏழு ஞாயிற்றுக்கிழமைகள் தேங்காயை நாம் தண்ணீரில் விட நம்மை தேடி அதிர்ஷ்டம் விரைவில் வந்துவிடும்.
இதையும் படிக்கலாமே: வீட்டில் தெய்வ சக்தியை அதிகரிக்க
மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு நம்பிக்கையுடன் செய்து விரைவிலேயே அதிர்ஷ்டத்தை பெற்று நலமுடன் வாழலாம்.