வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து பணத்தை சம்பாதித்து அதை சிறுக சிறுக சேமித்து வைத்து ஏதாவது ஒரு நகையோ அல்லது சொத்தோ வாங்கி வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அப்படி சேர்த்து வைத்த பணமோ நகையோ சொத்தோ ஏதாவது ஒரு சூழ்நிலையில் யாருக்காவது தர வேண்டிய நிலை வந்து அவர்கள் அதை நமக்கு திரும்பத் தராமல் விட்டுவிட்டார்கள் என்னும் பட்சத்தில் அதன் வேதனையை நம்மால் சொல்லவே முடியாது. அப்படிப்பட்ட வேதனையை நீக்கி இழந்த செல்வத்தை திருப்பித் தர செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வராஹி அம்மன் வெற்றிலை பரிஹாரம்
பணமோ, நகையோ, சொத்தோ, விலை மதிப்பு மிகுந்த பொருட்களோ எதுவாக இருந்தாலும் இழந்ததை திரும்பப் பெற வேண்டும் என்று நினைப்பது அனைவரின் இயல்புதான். ஆனால் அது திரும்ப கிடைத்து விடுமா என்று யோசித்தால் பலருக்கும் அது கிடைக்காத சூழ்நிலையில் கொண்டு போய் விடுகிறது. ஏனெனில் வாங்கியவர்கள் திருப்பித் தர வேண்டும் என்று நினைத்திருந்தால் நாம் அந்த செல்வத்தை இழந்திருக்கவே மாட்டோம் அல்லவா? எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அந்த சூழ்நிலையை மாற்றும் ஒரு அற்புத தெய்வமாக திகழ்பவள் தான் வராகி அம்மன்.
இந்த பரிகாரத்தை நாம் எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் பிரம்ம முகூர்த்த வேளையில் தான் செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக 5:30 மணிக்கு முன்பாகவே செய்து விட வேண்டும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜையறையில் வராகி அம்மனின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து சிவப்பு மலர்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள்.
புதிதாக ஒரு அகல் விளக்கை வாங்கி அதை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து வராகி அம்மனாக பாவித்து “ஓம் வராகிதாயே போற்றி” என்று கூறியவாறு தீபம் ஏற்ற வேண்டும். அப்பொழுது அந்த தீபச்சுடர் ஒளியில் வராகி அம்மன் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். இப்பொழுது நல்ல கிழியாத வெற்றிலையாக பார்த்து ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு சிறிய கிண்ணத்தில் மஞ்சள் தூளை சேர்த்து அதில் பன்னீரை ஊற்றி குழைத்து ஒரு தீக்குச்சியின் பின்புறத்தை பயன்படுத்தி அந்த மஞ்சள் தொட்டு உங்களின் செல்வத்தை யாரிடம் இழந்தீர்களோ யார் திருப்பித் தராமல் கஷ்டப்படுத்துகிறார்களோ அவர்களின் பெயரை எழுதி எந்த செல்வத்தை இழந்தீர்களோ அதையும் எழுத வேண்டும். ஒரே வரியில் எழுத முயற்சி செய்யுங்கள்.
பணம் என்றால் எவ்வளவு பணம், நகை என்றால் எந்த நகை, சொத்தாக இருந்தால் எந்த சொத்து என்பதை எழுத வேண்டும். இப்படி எழுதி முடித்துவிட்டு இந்த வெற்றிலையை அப்படியே வராகி அம்மனுக்கு முன்பாக வைத்துவிட்டு மனதார இழந்த செல்வம் உங்களிடம் திரும்ப வந்து சேர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அன்றைய தினம் முழுவதும் இந்த வெற்றிலை அப்படியே இருக்கட்டும்.
மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அந்த வெற்றிலையை எடுத்து சுருட்டி ஒரு நூலை கொண்டு கட்டி நீர் நிலைகளில் கொண்டு சென்று போட்டு விட வேண்டும். இதில் முக்கியமான குறிப்பு அசுத்த நீர் கலந்த இடத்தில் போடக் கூடாது. அப்படி உங்கள் வீட்டு அருகில் நீர்நிலைகள் இல்லாத பட்சத்தில் கால் படாத இடமாக பார்த்து இந்த வெற்றிலையை வைத்து விட வேண்டும்.
இந்த பரிகாரத்தை செய்து முடித்த பிறகு யாரிடம் நீங்கள் செல்வத்தை இழந்தீர்களோ அவர்களை தொடர்பு கொண்டு இழந்த செல்வத்தை திருப்ப தருமாறு கேட்க வேண்டும். இப்படி செய்தால் வராகி அம்மனின் அருளால் அவர்களின் மனம் மாறி உங்களுடைய செல்வத்தை திருப்பித் தரும் ஒரு நிலை உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: ஏமாற்றிய பொருளை திரும்ப பெற வாராகி வழிபாடு
மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதுடன் வராகி அம்மனை நினைத்து செய்ய இழந்த செல்வம் அனைத்தையும் திரும்ப பெறலாம்.