தலைமுடி உதிர்தல் என்பதை சாதாரணமாக நினைக்கக் கூடாது. காரணம் தலைமுடி உதிர்தல் தான் வழுக்கை விழுவதற்குரிய ஆரம்ப நிலையாக கருதப்படுகிறது. அதனால் யாராவது ஒருவருக்கு தலைமுடி அதிக அளவில் உதிர்கிறது என்றாலோ அடர்த்தி குறைகிறது என்றாலோ ஆங்காங்கே வழுக்கை விழக்கூடிய சூழ்நிலை வருகிறது என்றாலோ அதை சிறிதும் தாமதப்படுத்தாமல் உடனே அதற்குரிய தீர்வை காண வேண்டும். அப்படிப்பட்ட ஒரு இயற்கையான தீர்வை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தலைமுடி உதிர்தலுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் ஆராய்ந்து அதற்கேற்றால் போல் வழிமுறைகளை பின்பற்றினால் தான் முற்றிலுமாக தலை முடி உதிர்தல் என்பது சரியாகும். அப்படி ஒவ்வொன்றிற்கும் காரணத்தை கண்டறிந்து கொள்வதற்குள் போதும் போதும் என்றே ஆகிவிடும். அதனால்தான் பொதுவாக இருக்கக்கூடிய சில குறிப்புகளை பயன்படுத்தி நம்முடைய தலைமுடி உதிர்வதை சரி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு எளிமையான குறிப்பை பற்றி தான் பார்க்க போகிறோம்.
இந்த குறிப்பிற்கு நமக்கு மூன்று பொருட்கள் தேவைப்படும். ஒன்று பாதாம் பிசின், மற்றொன்று வாழைப்பழம், மூன்றாவதாக இருக்கக்கூடியது தேங்காய். இந்த மூன்று பொருட்களுமே நம்முடைய தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடியதாக திகழ்கிறது. மேலும் இந்த மூன்று பொருட்களையும் நாம் தொடர்ச்சியாக உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது நம்முடைய உடலும் ஆரோக்கியமாக திகழும். சரி இப்பொழுது எப்படி ஹேர் பேக் தயார் செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
முதலில் பாதாம் பிசினை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் நமக்கு எப்பொழுது ஹேர் பேக் தேவைப்படுகிறதோ உடனே நம்மால் தயார் செய்து கொள்ள முடியும். என்றைக்கு நாம் ஹேர் பேக்கை தயார் செய்யப் போகிறோமோ அன்றைக்கு காலையிலேயே ஒரு ஸ்பூன் அளவிற்கு பாதாம் பிசினை எடுத்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விடுங்கள். இரவே ஊற வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இந்த ஹேர் பேக்கை தயார் செய்வதற்கு முன்பாக ஊற வைத்தாலே போதும். நன்றாக உருவிடும்.
அடுத்ததாக அரை மூடி தேங்காய் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் அளவிற்கு தேங்காய் பால் வருவது போல் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இருக்கக்கூடியது வாழைப்பழம். கனிந்த வாழைப்பழமாக இரண்டு வாழைப்பழங்களை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதுடன் எடுத்து வைத்திருக்கும் ஒரு கிளாஸ் தேங்காய் பாலையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இரண்டும் நன்றாக அரைபட்டதும் ஊற வைத்திருக்கும் பாதாம் பிசினையும் இதனுடன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு நல்ல ஹேர் பேக் தயாராகிவிட்டது. இந்த ஹேர் பேக்கை தலையில் தடவுவதற்கு முன்பாக தலையில் சிறிதளவு எண்ணெய் கண்டிப்பாக இருக்க வேண்டும். தலையின் வேர்க்கால்களில் இந்த ஹேர் பேக்கை நன்றாக படும் படி தடவ வேண்டும். வேர்க்கால்கள் மட்டுமல்லாமல் தலைமுடியிலும் இந்த ஹேர் பேக்கை நாம் தடவிக் கொள்ள வேண்டும். இப்பொழுது அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு அரை மணி நேரம் கழித்து எப்பொழுதும் போல் தலைக்கு குளித்துவிட்டு வந்து விடுங்கள்.
பட்டுப்போன்று மிளிரக்கூடிய கூந்தலை உங்களால் பெற முடியும். மேலும் முடி உதிர்தல் பிரச்சனை குறையும். அடர்த்தி குறைந்து கொண்டு இருப்பவர்கள் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தும் பொழுது அவர்கள் தலைமுடியின் அடர்த்தி என்பது அதிகரிக்கும். மேலும் ஆங்காங்கே வழுக்கை போல் தோன்றுகிறது என்று நினைப்பவர்கள் இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீதம் பயன்படுத்தி வர விரைவிலேயே வழுக்கை விழாமல் முடி உதிர்ந்த இடத்தில் அதிக அளவில் புதிய முடிகள் வளர்வதை காண முடியும்.
இதையும் படிக்கலாமே: கருஞ்சீரக ஹேர் டை தயாரிக்கும் முறை
பல அற்புதமான சத்து நிறைந்த பொருளாக திகழக்கூடிய இந்த மூன்று பொருட்களையும் நாம் உணவாகவும் அதே சமயம் ஹேர் பேக் ஆகவும் எடுத்துக் கொள்ளும் பொழுது நம்முடைய தலைமுடி ஆரோக்கியம் என்பது மிகவும் சிறப்பாக இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.