பெருமாளின் வாகனமாக திகழக்கூடியவர் கருட பகவான் என்றும் அவருக்கென்றே ஒரு புராணம் இருக்கிறது என்றும் அந்த புராணத்தை பெருமாளே கருடனிடம் கூறினார் என்றும் கூறப்படுகிறது. மேலும் கருடன் இந்த காலத்திலும் விசேஷமான கோவில்களின் கும்பாபிஷேகம் நடக்கும் பொழுது கருடர் வலம் வருவார் என்பதை பலரும் பார்த்திருப்போம். அவ்வளவு சக்தி வாய்ந்த கருடரை கருட பஞ்சமி அன்று வழிபட வேண்டிய முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கருடர் தன்னுடைய தாயை காப்பாற்றுவதற்காக புத்திசாலித்தனமாக செயலாற்றுவதை பார்த்து பெருமாள் வியந்து கருடருக்கு தன்னுடைய வாகனமாக இருக்கும் வரத்தை தந்தார் என்று புராணங்கள் கூறுகிறது. அப்படிப்பட்ட கருடரை நாம் வழிபாடு செய்தோம் என்றால் குடும்பத்தில் இருக்கக்கூடிய சகோதர சகோதரிகளின் ஒற்றுமை என்பது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் சிவன் வழிபாட்டில் நந்திக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவிற்கு பெருமாள் வழிபாட்டில் கருடருக்கும் நாம் முக்கியத்துவம் தர வேண்டும். பெருமாள் ஆலயத்திற்கு செல்பவர்கள் கருடரை வணங்கிய பிறகுதான் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் பெருமாளின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கருடர் அவதரித்த தினமாக தான் கருட பஞ்சமி திகழ்கிறது. மேலும் பெருமாள் தன்னுடைய வாகனமாக கருடரை ஏற்றுக்கொண்ட நாளும் இந்த கருட பஞ்சமி தான் என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட கருட பஞ்சமி நாளன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அவருக்கு துளசி மாலை சாற்றி அவரை மனதார வழிபாடு செய்து கொள்ளுங்கள். இயன்றவர்கள் அன்றைய தினம் பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய கருடரை தரிசனம் செய்து வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரியது.
அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது அவருக்கு நெய் தீபத்தை ஏற்றி வைத்து அவரை வலம் வருவது என்பது மிகவும் சிறப்பு. அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து மாலை நேரத்தில் கருடருக்கு கொழுக்கட்டையை நெய்வேத்தியமாக வைத்து படைத்து வழிபாடு செய்ய வேண்டும். “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தை 108 முறை மனதார உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரித்தரித்து வழிபாட்டை நிறைவு செய்த பிறகு விரதத்தை விட வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் கருடனின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும். அப்படி அவரின் அருள் பரிபூரணமாக கிடைப்பதன் மூலம் செல்வ செழிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பங்காளி சண்டை, சொத்து பிரச்சினை போன்றவை தீரும். உடலில் ஏதேனும் விஷ பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில் அவை அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே மகாலக்ஷ்மி வசிய மை தயார் செய்யும் முறை
மிகவும் எளிமையான அதே சமயம் சக்தி வாய்ந்த கருட பகவானை நாளைய தினம் இந்த முறையில் விரதம் இருந்து வழிபாடு செய்து அவருடைய பரிபூரண அருளை பெறுவோம்.