- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசகல ஐஸ்வர்யம் தரும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு

சகல ஐஸ்வர்யம் தரும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு

- Advertisement -

அஷ்டமி திதி என்பது பைரவருக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. மாதத்தில் இரண்டு முறை அஷ்டமி திதி என்பது வரும். அஷ்டமி திதி என்பது நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை விரட்டியடிக்கும் திதியாகவும் கருதப்படுகிறது. இந்த இரண்டு திதிகளிலும் பைரவரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நல்ல பலன்கள் நமக்கு கிடைக்கும். வளர்பிறை அஷ்டமி திதி அன்று காலபைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது கால பைரவரின் அருளோடு அஷ்ட லட்சுமிகளின் அருளும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வளர்பிறை அஷ்டமி திதி அன்று வீட்டிலேயே எளிமையான முறையில் பைரவர் வழிபாட்டை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வளர்பிறை அஷ்டமி வழிபாடு

அனைத்து சிவாலயங்களிலும் காலபைரவர் என்பவர் இருப்பார். இவர் அந்த கோவிலை பாதுகாக்கும் காவல் தெய்வமாக திகழ்கிறார். மேலும் இன்றைய காலகட்டத்திலும் நாம் ஏதாவது மலை மேல் இருக்கும் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும் பொழுது நம்முடன் பைரவர் வருவதை நாம் கண்கூடாக பார்த்திருப்போம். ஒரு குறிப்பிட்ட எல்லை வரை பைரவர் வந்துவிட்டு பிறகு எங்கே சென்றார் என்பது கூட தெரியாமல் போயிருக்கும். அந்த அளவிற்கு நமக்கு காவல் தெய்வமாக பைரவர் திகழ்கிறார். அப்படிப்பட்ட பைரவரை நாம் அஷ்டமி தினத்தன்று வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த அஷ்டமி திதி என்பது நாளை புதன்கிழமை வருகிறது. மாலை ஐந்து மணி வரை அஷ்டமி திதி என்பது இருக்கிறது. இயன்றவர்கள் அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் அருகில் இருக்கும் பைரவர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. பைரவருக்கு உகந்த காலமாக திகழ்வது ராகு காலம். ராகு காலத்தில் பைரவரை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படி பார்க்கும் பொழுது புதன்கிழமை அன்று 12 மணியிலிருந்து 1:30 மணி வரை ராகு காலம் இருக்கிறது. இந்த நேரத்தில் கோவில்களின் நடை சாத்தப்பட்டு இருக்கும்.

இந்த நேரத்தில் கால பைரவரை வீட்டில் வழிபாடு செய்யலாம். அப்படி ராகு காலத்தில் வழிபாடு செய்ய இயலாது என்பவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம், அல்லது காலை 9:15 லிருந்து 10:15 வரை செய்யலாம். இதற்கு கண்டிப்பான முறையில் பைரவரின் படம், சிலை வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு சிலரது இல்லத்தில் இவரது படமோ சிலையோ இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அவருக்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து இந்த வழிபாட்டை செய்யலாம். அப்படி பைரவர் சிலையோ படமோ இல்லாத பட்சத்தில் பைரவரை நினைத்து தீபம் ஏற்றி வைத்து அந்த தீபத்தில் பைரவரை ஆவாகனம் செய்து வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

ஒன்று அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் அகல்விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு பைரவருக்கு நெய்வேத்தியமாக உப்பு சேர்க்காத தயிர் சாதத்தை வைக்க வேண்டும். அடுத்ததாக நம்முடைய கையில் சிவப்பு நிற மலர்களை வைத்துக்கொண்டு “ஓம் பைரவாய நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு அந்த மலர்களை ஏற்றி வைத்திருக்கும் தீபத்திற்கு சமர்ப்பித்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.

இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கும் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் வாழ்க்கையிலோ, தொழிலிலோ, வேலையிலோ, படிப்பிலோ எதிரிகள் என்று யாராவது இருக்கும் பட்சத்தில் அவர்களின் தொல்லைகளில் இருந்து முற்றிலுமாக விடுபடுவோம். அதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:தரித்திரம் நீக்கும் அஷ்டமி இரவு பரிகாரம்

இந்த எளிமையான அதேசமயம் சக்தி வாய்ந்த பைரவர் வழிபாட்டை அஷ்டமி திதியில் மேற்கொள்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்