அஷ்டமி என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய தெய்வம் கால பைரவர் தான். தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி என்று இரண்டு அஷ்டமிகள் வரும். தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகள் தொல்லை நீங்கும், துன்பங்கள் விலகும், கஷ்டங்கள் அகலும், நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும். அவ்வளவு சிறப்பு மிகுந்த தேய்பிறை அஷ்டமி புதன்கிழமையுடன் சேர்ந்து வருவது என்பது இன்னும் அதிக பலனை தரும். அந்த வகையில் செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி அன்று கால பைரவரை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
புரட்டாசி புதஷ்டமி வழிபாடு
அனைத்து சிவாலயங்களிலும் காலபைரவர் இருப்பார். சிவபெருமானின் மற்றொரு அவதாரமாக இருக்கக்கூடியவர் தான் கால பைரவர். இவர் நாயை தன்னுடைய வாகனமாக வைத்திருப்பார். சனீஸ்வர பகவானின் குருவாக திகழக் கூடியவர் என்பதால் காலபைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கர்ம வினைகள் என்பது குறைய ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட காலபைரவரை தினமும் நாம் வழிபாடு செய்யலாம். தினமும் வழிபாடு செய்ய இயலாதவர்கள் அஷ்டமி திதி வரும் நாட்களில் மட்டுமாவது கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த மாதம் 24 ஆம் தேதி மாலை 6:50க்கு அஷ்டமி திதி ஆரம்பிக்கிறது. இது மறுநாள் அதாவது செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி மாலை 5:55 வரை இருக்கிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் நாம் கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் வழிபாடு செய்வதாக இருந்தாலும் கோவிலில் வழிபாடு செய்வதாக இருந்தாலும் எந்த முறையில் வழிபாடு செய்தால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து போகும் என்று தெரிந்து கொள்வோம்.
வீட்டில் வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் காலபைரவரின் படமோ சிலையோ இருந்தால் அதை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து சிவப்பு நிற மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். படமோ சிலையோ இல்லை என்பவர்கள் நாம் ஏற்றுக் கூடிய தீபத்திலேயே காலபைரவரை ஆவாகனம் செய்து கொள்ளலாம். இப்பொழுது ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிவப்பு நிற துணியை எடுத்து அதில் 27 என்ற எண்ணிக்கையில் மிளகு போட வேண்டும். பிறகு இதை மூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபத்தை ஏற்றும் போது காலபைரவரை மனதார நினைத்துக் கொண்டே ஏற்ற வேண்டும். பிறகு இந்த தீபத்தில் கால பைரவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவரை வழிபாடு செய்ய வேண்டும். அவருக்கு நெய்வேத்தியமாக காரமாக இருக்கக்கூடிய புளி சாதத்தை வைத்து படைக்க வேண்டும். காலபைரவரின் மந்திரத்தை 108 முறை உச்சரித்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.
ஆலயத்திற்கு செல்பவர்களாக இருக்கும் பட்சத்தில் காலபைரவரின் சன்னதியில் அவருடைய பாதத்தில் வைத்து சிவப்பு நிற மலர்களை வாங்கி கொடுத்து நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அந்த மூன்று எலுமிச்சம் பழங்களில் ஒன்றை மட்டும் திரும்ப வீட்டிற்கு எடுத்து வந்து வீட்டு நிலை வாசலில் கட்டுவதன் மூலம் வீட்டிற்குள் எந்தவித எதிர்மறை ஆற்றல் வராமல் இருக்கும். காலபைரவரின் சன்னிதியில் தீபம் ஏற்றி வைத்த பிறகு அங்கேயே அமர்ந்து கால பைரவரின் மந்திரத்தை மனதார 108 முறை கூற வேண்டும்.
மந்திரம்
ஓம் காலகாலாய வித்மஹே
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவப் பிரஸோதயாத்
இதையும் படிக்கலாமே:புரட்டாசி புதன் கிழமை வழிபாடு
கால பைரவரை தேய்பிறை அஷ்டமி அன்று இந்த முறையில் மந்திரம் கூறி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் இருக்க கூடிய எதிரிகள், கஷ்டங்கள், துன்பங்கள், எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகி நல்ல முன்னேற்றமான வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.