ஒவ்வொரு வருடமும் நவராத்திரி விழாவானது, கோலாகலமாக இந்துக்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு பண்டிகை ஆகும். சிவனுக்கு ஒரு ராத்திரி என்றால், அம்பிகைக்கு நவராத்திரி என்பார்கள். இந்த ஒன்பது நாட்களும் கொலு வைத்து விசேஷமாக கொண்டாடுபவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம். நவராத்திரி இந்த வருடம் எப்பொழுது ஆரம்பம்? நவராத்திரியின் பொழுது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி ஆரம்பமாகும் நவராத்திரி அக்டோபர் 12ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. மகிஷன் என்னும் கொடூரமான அரக்கனை அழிக்க மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்தவர்கள் அம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவர் ஆவர். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களை செய்பவர்கள் மும்மூர்த்திகள். இவர்களின் தர்ம பத்தினியாக இருக்கும் இம்மூவர் அவர்களின் தொழிலுக்கு உதவியாக இருப்பவர்கள்.
கொலு வைத்து கொண்டாடுபவர்கள், கணவனின் தொழிலுக்கு உதவி செய்யும் நல்ல மனைவியாக முதலில் இருக்க வேண்டும். அரக்கனை அழிக்க கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாவில் கலந்து கொள்பவர்கள் இல்லத்தில் இருக்கும் அரக்கன் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் அகன்று சுபிட்சமான நல்ல சந்தோஷமான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். குடும்பத்தில் பழக்கம் இல்லை என்றாலும் கொலு வைத்து கொண்டாடலாம். புதிதாக கொலு வைப்பவர்கள் சற்று தயக்கம் காண்பிக்கின்றனர். கொலு வைக்கும் இல்லத்தில் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. கொழு பொம்மைகளுக்கு காதுகள் உண்டு. பக்தியோடு வைக்கும் இந்த பொம்மைகளுக்கு நீங்கள் பேசும் அனைத்தும் கேட்கும்.
அமங்கலமான சொற்களையும், எதிர்மறையான பேச்சுகளையும் கொலு வைப்பவர்கள் இல்லத்தில் பேசக்கூடாது. இப்படி செய்வதால் எதிர்மறையான விளைவுகள் தான் ஏற்படும். நல்ல இசைகளையும், தெய்வீக பாடல்களையும் ஒலிக்க விட வேண்டும். மந்திரங்கள், பக்தி பாடல்கள், ஸ்லோகங்கள் போன்றவை அந்த இல்லத்தில் கேட்க வேண்டும். வண்ணமிகு கோலங்கள் அரிசி மாவினால் மற்றும் மலர்களால் வாசலில் 9 நாட்களும் விதவிதமாக போட்டு வைக்க வேண்டும்.
ஓரறிவுள்ள ஜீவன் முதல் ஆறறிவுள்ள ஜீவன் வரை ஆறு படிகளிலும், ஏழாம் படியில் மனிதர் உருவமும், எட்டாம் படியில் மனித சக்தியை தாண்டிய சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் உருவமும், ஒன்பதாம் படியில் கலசம் வைத்தும், தெய்வ விக்கிரகங்களையும் வைக்க வேண்டும். நீங்கள் வைக்கும் பொம்மைகள் மண் பொம்மையாக இருப்பது சிறப்பு. கொலு வைக்காதவர்கள் கொலு பொம்மைகளை கோவில்களுக்கும், ஆசிரமங்களுக்கும் தானம் செய்யலாம். கொலு வைப்பவர்கள் இல்லத்திற்கும், நீங்கள் பரிசாக கொடுக்கலாம். இதனால் உங்களுக்கு பெரும் நன்மைகள் நடக்கும்.
இதையும் படிக்கலாமே:
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்
கொலுவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு சுண்டல், நவராத்திரி பண்டங்களை தவறாது கொடுக்க வேண்டும். நவராத்திரி சிறப்பு பரிசுகளையும் கொடுத்து வழி அனுப்பினால் அவர்கள் உள்ளம் மகிழ்ந்து உங்களுக்கு நல் ஆசீர்வாதங்கள் கொடுப்பார்கள். முதல் மூன்று நாட்கள் அம்பிகையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் பிரதானமாக வைத்து வழிபட வேண்டும். அந்தந்த தெய்வங்களுக்கு உரிய பூக்கள், பிரசாதங்கள், கோலங்கள் போன்றவற்றை தேர்ந்தெடுத்து செய்து மகிழுங்கள். ஒன்பது நாட்களிலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சந்தோஷமும், ஒற்றுமையும் இருக்க வேண்டும். சண்டைகள் போடக்கூடாது. நேர்மறையான சிந்தனைகளோடு கொலு வைத்து பூஜிப்பவர்களுக்கு நிச்சயம் வாழ்வில் கிடைக்க வேண்டிய அத்தனையும் இந்த நவராத்திரியின் முடிவில் கிடைக்கும் என்பது ஐதீகம்.