முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களாக கருதக்கூடிய விரதங்கள் செவ்வாய்க்கிழமை விரதம், கிருத்திகை நட்சத்திர விரதம், சஷ்டி திதி விரதம். இந்த மூன்று விரதங்களையும் யார் ஒருவர் முறையாக மேற்கொள்கிறார்களோ அவர்களுக்கு முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திர நாள் என்பது மிகவும் சிறப்பு கூறிய நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இந்த பிரச்சினைகள் நீங்குவதற்கு எந்த முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் எந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஐப்பசி கிருத்திகை பரிகாரம்
ஐப்பசி மாதம் என்பது மிகவும் உத்தமமான மாதமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட உத்தமமான மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம் என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. இந்த கிருத்திகை நட்சத்திரம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு மேல் தொடங்கி அக்டோபர் மாதம் 20ஆம் தேதி மதியம் 1:30 மணி வரை இருக்கிறது. அதனால் கிருத்திகை வழிபாட்டை மேற்கொள்பவர்கள் 19ஆம் தேதி மாலையில் வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றைய தினத்தில் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் இருக்கும் முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்து விட்டு விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். இயன்றவர்கள் அன்றைய தினம் அருகில் இருக்கும் முருக ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது நல்ல பலனை தரும். கிருத்திகை நட்சத்திர விரத வழிபாட்டை மேற்கொள்பவர்கள் அன்றைய தினம் மாலையில் வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதோடு அன்றைய தினத்தில் நாம் ஒரு எளிமையான பரிகாரத்தை செய்தோம் என்றால் அந்த பரிகாரத்தின் மூலமாக நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது. அந்த பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பரிகாரத்திற்கு முருகப்பெருமானுக்கு உகந்த துவரம் பருப்பு வேண்டும். இந்த துவரம் பருப்பு செவ்வாய் பகவானுக்குரிய தானியமாகவும் கருதப்படுகிறது. கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் என்பதால் முருகப்பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திர நாளன்று துவரம் பருப்பை வைத்து நாம் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது கடன் பிரச்சினை தீரும் என்று கூறப்படுகிறது. இதற்கு சிறிய அளவில் இரண்டு கிண்ணங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். கிண்ணம் இல்லாத பட்சத்தில் இரண்டு அகல் விளக்குகளை கூட எடுத்துக் கொள்ளலாம். அது நிரம்ப துவரம் பருப்பை போட்டுக் கொள்ளுங்கள்.
கடன் தீர வேண்டும் என்றால் அதற்கு நமக்கு பணவரவு அதிகரிக்க வேண்டும். பண வரவிற்குரிய தெய்வமாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கக்கூடிய பொருட்களுள் கிராம்பும் ஏலக்காயும் இருக்கிறது. அதனால் ஒரு கிண்ணத்தில் இருக்கக்கூடிய துவரம் பருப்பின் மீது இரண்டு கிராம்பையும், மற்றொரு கிண்ணத்தில் இருக்கக்கூடிய துவரம் பருப்பின் மீது இரண்டு ஏலக்காயையும் வைத்து முதலில் விநாயகப் பெருமானை மனதார வழிபாடு செய்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக நம்முடைய குலதெய்வத்தை நினைத்து வழிபட வேண்டும். அடுத்ததாக முருகப் பெருமானிடம் நம்முடைய கடன் பிரச்சினை அனைத்தும் தீர வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைக்க வேண்டும். கடைசியாக மகாலட்சுமி தாயாரிடம் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து வழிபாடு செய்ய வேண்டும். கடைசியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
மறுநாள் காலையில் இந்த துவரம் பருப்பை எடுத்து பறவைகளுக்கு தானமாக போட்டு விட வேண்டும் அல்லது கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். ஏலக்காய் மற்றும் கிராம்பை பணம் வைக்கும் இடங்களில் வைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கடன் பிரச்சினை தீர்வதற்குரிய பணவரவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:தீராத நோய் தீர சிவ வழிபாடு
முருகப்பெருமானை முழுமனதோடு நம்பி இந்த வழிபாட்டையும் பரிகாரத்தையும் செய்பவர்களுக்கு கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.