செவ்வாய்க்கிழமை என்பது செவ்வாய் பகவானுக்குரிய கிழமையாக திகழ்கிறது. பொதுவாக இந்த கிழமையில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது என்பதுதான் பலரும் அறிந்தது. ஆனால் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சதுர்த்தி திதி அன்று நாம் செய்யக்கூடிய செயல்களால் நமக்கு அளவில்லாத புண்ணியம் உண்டாகும் என்றும் கர்ம வினைகள் குறையும் என்றும் ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட அங்காரக சதுர்த்தி என்பது நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அட்சய யோகம் தரும் வழிபாடு
சதுர்த்தி திதி அன்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது நம்முடைய வழக்கமாகவே இருக்கும். அந்த சதுர்த்தி திதியானது செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும்போது அதை நாம் அங்காரக சதுர்த்தி என்று கூறுவோம். அங்காரக சதுர்த்தி நாளன்று சில காரியங்களை நாம் செய்யும்பொழுது நமக்கு அட்சய யோகம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. எப்படி அளவில்லாமல் பொருட்கள் வந்து கொண்டே இருக்குமோ அதே போல் நமக்கும் யோகங்கள் வந்து கொண்டே இருக்கும் என்பதுதான் இதற்கு பொருள்.
அன்றைய தினத்தில் நதிநீர் ஆடுவதும், தான தர்மங்களை செய்வதும், ஜெபம் செய்வதும், ஹோமம் வளர்ப்பதும் மிகப்பெரிய புண்ணியத்தை நமக்கு உண்டு பண்ணும். இந்த அளவு தான் புண்ணியம் கிடைக்கும் என்று கூற முடியாத அளவிற்கு புண்ணியங்கள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய எளிமையான வழிபாட்டு முறைகள் நமக்கு பல நன்மைகளை தரும். அந்த வழிபாட்டு முறையை பற்றி தெரிந்து கொள்வோம்.
விநாயகப் பெருமானின் ஆலயத்திற்கு சென்று நம்மால் இயன்ற பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு விநாயகப் பெருமானுக்கு முன்பாக ஒரு வாழை இலையை விரித்து அதில் பச்சரிசியை பரப்பி அதற்கு மேல் இரண்டு அச்சு வெல்லத்தை வைத்து நெய் ஊற்றி பூ திரி போட்டு தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள், அவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும், போட்டித் தேர்வுக்காக தயார் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு அந்தப் போட்டி தேர்வில் வெற்றி கிடைக்கும். முருகன் ஆலயத்திற்கு சென்று இதே முறையில் தீபமேற்றி வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய வினைகள் அனைத்தும் குறையும் என்றும் கடன், கஷ்டம் போன்ற அனைத்தும் படிப்படியாக விலகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தீபத்தை இதே முறையில் சிவன் கோவிலில் சிவன் பார்வதிக்கு முன்பாக ஏற்றினோம் என்றால் கணவன் மனைவிக்கு இடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்றும், பிரிந்த தம்பதிகள் கூட ஒன்றாக சேர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. இதே தீபத்தை பெருமாள் ஆலயத்திற்கு சென்று இந்த முறையில் ஏற்றினோம் என்றால் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு செல்வ வளம் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
குறிப்பு: இந்த தீபத்தை ஆலயத்தில் ஏற்றுவதன் மூலமே முழு பலனையும் பெற முடியும். ஆலயம் இல்லாத பட்சத்தில் வேறு வழியே இல்லை என்று நினைப்பவர்கள் வீட்டில் ஏற்றலாம். அப்படியே ஏற்றினாலும் முழு பலன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த முறையில் ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று அங்காரக சதுர்த்தி நாள் அன்று ஏற்றுவதைப் போலவே முருகப்பெருமானுக்கு 6 அல்லது 16 வாரங்கள் செவ்வாய்க்கிழமையில் இந்த தீபத்தை ஏற்றினாலும் இதே பலன் கிடைக்கும் என்றும், சிவன் பார்வதிக்கு 16 திங்கட்கிழமை ஏற்ற வேண்டும் என்றும், பெருமாள் மகாலட்சுமிக்கு 16 வெள்ளிக்கிழமை ஏற்ற வேண்டும் என்றும், விநாயகப் பெருமானுக்கு 16 புதன்கிழமை ஏற்ற வேண்டும் என்றும் கூறப்படுகிறது. தங்களுடைய வேண்டுதலுக்கு ஏற்ப அதற்குரிய கிழமைகளில் சென்று முழுமனதோடு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் முழு பலனையும் பெற முடியும்.
இதையும் படிக்கலாமே:சொந்த நிலம் வாங்க பரிகாரம்
நம்முடைய தேவைகளை பொறுத்து அங்காரக சதுர்த்தி நாளன்று இந்த முறையில் தீபமேற்றி வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய தேவைகள் பூர்த்தியடைவதோடு அளவில்லாத புண்ணியத்தையும் பெற்று கஷ்டங்களை குறைத்துக் கொள்ள முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.