கார்த்திகை மாதம் என்பது எப்படி சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும், ஐயப்பனுக்கும் உகந்த மாதமாக திகழ்கிறதோ அதேபோல்தான் மகாலட்சுமி தாயாருக்கும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட மாதத்தில் மகாலட்சுமி தாயாருக்குரிய கிழமையான வெள்ளிக்கிழமையில் நாம் மகாலட்சுமி தாயார், சில குறிப்பிட்ட முறைகளில் வழிபாடு செய்யும் பொழுது நம் வீட்டிற்குள் வந்து நமக்கு அனைத்து விதமான செல்வ சுகத்தையும் அருள்வார் என்று கூறப்படுகிறது. அப்படி மகாலட்சுமி தாயாரை வீட்டிற்கு அழைப்பதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மகாலட்சுமி தீப வழிபாடு
மகாலட்சுமி தாயார் 108 பொருட்களில் வீற்றிருக்கிறார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கக் கூடிய அந்த பொருட்களை வீட்டில் வாங்கி வைத்து வழிபாடு செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது கிடைக்கும் என்று நமக்கு தெரியும். மகாலட்சுமி தாயார் ஒரு இடத்தில் நிலையாக இருக்கக் கூடியவள் அல்ல. ஒவ்வொரு இடத்திற்கும் மாறிக்கொண்டே இருப்பாள். அதனால் மகாலட்சுமி தாயாரை நம் வீட்டிற்கு வரவழைப்பதற்காகவே சில வழிபாட்டு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டு முறையைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இந்த வழிபாட்டை இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. வீட்டு பூஜை அறையில் ஒரு இடத்தை சுத்தம் செய்து பன்னீர் தெளித்து கொள்ளுங்கள். பிறகு அதில் பச்சரிசி மாவினால் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய வேண்டும். ஸ்வஸ்திக் சின்னத்தில் மகாலட்சுமி தாயார் குடியிருக்கிறாள் என்பது பலரும் அறிந்த உண்மையே. இப்படி ஸ்வஸ்திக் சின்னம் வரைந்த பிறகு அந்த ஸ்வஸ்திக் சின்னத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த ஸ்வஸ்திக் சின்னத்தின் நான்கு முனைகளிலும் நான்கு அகல் விளக்குகளை வைக்க வேண்டும். ஸ்வஸ்திக் சின்னத்திற்கு நடுவில் ஒரு அகல் விளக்கை வைத்து சுத்தமான நெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். தாமரை தண்டு திதி கிடைக்காத பட்சத்தில் பஞ்சுத்திரி உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
நெய்வேத்தியமாக பால் பாயாசம், கற்கண்டு பொங்கல் போன்றவற்றை வைக்க வேண்டும். பிறகு மல்லிகை பூவால் மகாலட்சுமி அஷ்டகத்தை கூறி அந்த ஸ்வஸ்திக் சின்னத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஒரு வேளை மல்லிகை பூ கிடைக்கவில்லை என்பவர்கள் வில்வ இலையையோ அல்லது துளசியையோ பயன்படுத்தலாம். முடிந்த அளவிற்கு வாசனை நிறைந்த மல்லிகை பூவை பயன்படுத்துவதே அதீத பலனை தரும். இப்படி அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். இந்த வழிபாட்டை நாம் செய்து முடிப்பதற்குள்ளாகவே மகாலட்சுமி தாயார் நம் வீட்டிற்கு வந்துவிடுவாள் நாம் ஏற்றி வைத்த அந்த தீபத்தில் எழுந்தருளி விடுவாள் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: ஐஸ்வர்யம் பெருக கார்த்திகை வெள்ளிக்கிழமை பூஜை
ஒருவருடைய வீட்டில் அனைத்து விதமான செல்வங்களும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமி தாயாரின் வாசம் என்பது கண்டிப்பாக வேண்டும். முழு நம்பிக்கையுடன் இந்த முறையில் கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை அன்று பூஜை செய்பவர்களுடைய வீட்டில் கண்டிப்பான முறையில் மகாலட்சுமி தாயார் எழுந்தருளி அனைத்து விதமான செல்வங்களையும் வாரி வழங்குவாள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.