நம்முடைய முன்னோர்கள் அன்றைய காலத்தில் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். நாளடைவில் அது படிப்படியாக குறைந்தது. மறுபடியும் இப்பொழுது திரும்பவும் இந்த சத்து மிகுந்த சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் முன் வருகிறார்கள். அவ்வாறு சேர்த்துக்கொள்ளக்கூடிய மிகவும் முக்கியமான ஒரு பொருளாக திகழ்வதுதான் கருப்பு கவுனி அரிசி. இதில் பல நன்மைகள் இருக்கின்றன.
கருப்பு கவுனி அரிசியை நாம் அவ்வப்பொழுது சாப்பிடுவதன் மூலம் மருந்தே கண்டுபிடிக்க முடியாத கேன்சர் கூட வராமல் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த கருப்பு கவுனி அரிசியை வைத்து என்ன செய்வது? எப்பொழுதும் செய்வது? கஞ்சி செய்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டேன் என்கிறார்களே என்று யோசிப்பவர்களுக்கு இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் கருப்பு கவுனி அரிசியை வைத்து எப்படி பாயாசம் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
கருப்பு கவுனி அரிசி – 1 கப்,
பாசிப்பருப்பு – 1/4 கப்,
தண்ணீர் – 5 கப்,
கருப்பட்டி – 2 கப்,
ஏலக்காய் – 2,
தேங்காய் பால் – 3 கப்,
நெய் – 3 டேபிள்ஸ்பூன்,
கிஸ்மிஸ் முந்திரி – சிறிதளவு
செய்முறை
முதலில் கருப்பு கவுனி அரிசியை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பாசிப்பருப்பை சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு குக்கரை எடுத்து அதில் பாசிப்பருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் நாம் ஊற வைத்திருந்த கருப்பு கவுனி அரிசியையும் சேர்த்து ஐந்து கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி பத்து விசில் விட வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கருப்பட்டியை சேர்த்து கருப்பட்டி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதை நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். விசில் முற்றிலும் நீங்கிய பிறகு அதைத் திறந்து மத்தை பயன்படுத்தி நன்றாக மசித்து விட வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு அதில் நாம் வேகவைத்து வைத்திருக்கும் கருப்பு கவுனி அரிசியையும் பாசிப்பருப்பையும் சேர்த்து ஒருமுறை நன்றாக கிளற வேண்டும். அந்த நெய் அரிசியில் நன்றாக கலந்த பிறகு நாம் கரைத்து வைத்திருக்கும் கருப்பட்டி பாகை அதில் ஊற்ற வேண்டும்.
பிறகு இரண்டு ஏலக்காயை நன்றாக தட்டி அதில் போட்டு கொதிக்க விட வேண்டும். இது நன்றாக கொதித்த பிறகு இதில் மூன்று கப் அளவிற்கு தேங்காய் பாலையும் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பாயாசம் எந்தளவிற்கு தண்ணியாக இருக்க வேண்டுமோ அதைவிட அதிகளவில் தண்ணியாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் ஆரிய பிறகு கெட்டியாகும்.
தேங்காய் பால் ஊற்றிய பிறகு இவை அனைத்தும் நன்றாக கொதித்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடுங்கள். ஒரு சிறிய தாளிக்கும் கரண்டியை வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி நெய் உருகியதும் கிஸ்மஸ் முந்திரியை போன்று சிவக்க வறுத்து இந்த பாயாசத்தில் சேர்த்து விடலாம். கமகமக்கும் செட்டிநாடு கருப்பு கவுனி அரிசி பாயாசம் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே:பஞ்சு போன்ற கார்த்திகை தீப அப்பம் செய்முறை
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பழங்கால உணவுப் பொருட்களை இன்றைய காலத்தில் இருக்கக்கூடியவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் இப்படி செய்து கொடுக்கலாம். முயற்சி செய்து பாருங்கள். ஒரு முறை சாப்பிட்டால் மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.