முழுமுதற் கடவுளாக திகழக்கூடிய விநாயகப் பெருமானுக்கு அனைத்து மாதங்களும் அனைத்து தினங்களும் சிறப்புக்குரியதாகவே திகழ்கிறது. அதிலும் குறிப்பாக அவருக்குரிய திதியான சதுர்த்தி திதி அன்று விநாயகப் பெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும். மேலும் சங்கடஹர சதுர்த்தி சமயத்தில் நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய சங்கடங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் மார்கழி மாதத்தில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமானை எந்த முறையில் வழிபாடு செய்தால் பணவரவிற்கு எந்தவித குறையும் இருக்காது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் முழு முதற் கடவுளான விநாயகர் பெருமானை முதலில் வழிபாடு செய்துவிட்டு தான் அந்த காரியத்தை தொடங்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த காரியத்தில் வெற்றிகள் உண்டாகும், தடைகள் ஏதும் ஏற்படாது என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அனைத்தையும் அருளக்கூடிய அந்த தெய்வத்திடம் நம்முடைய செல்வங்கள் பெருக வேண்டும் என்பதற்காகவும் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்பதற்காகவும் வழிபடலாம் அல்லவா? அப்படி நாம் வழிபாடு செய்வதற்குரிய தினமாக தான் மார்கழி மாதத்தில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாள் என்பது திகழ்கிறது.
அன்றைய தினத்தில் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு விநாயகப் பெருமானை வரவேற்கும் விதமாக வாசலில் கோலம் போட்டு விளக்கேற்றி வைத்து விநாயகப் பெருமானை நினைத்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். நம்முடைய உள் மனதில் ஓம் சௌம் சௌமியாய கணபதியே நமோ நமஹ என்னும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். காலையில் மதியத்திலும் எந்த வித உணவையும் உட்கொள்ளாமல் மாலை நேரத்தில் வீட்டில் நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
இதற்கு நமக்கு முதலில் கிழியாத ஒரு நல்ல வெற்றிலை ஒன்று வேண்டும். பிறகு மஞ்சளில் பன்னீரை ஊற்றி குழைத்து மஞ்சள் பிள்ளையாரை பிடித்து அந்த வெற்றிலையின் மீது வைத்துக் கொள்ள வேண்டும். இடது கையில் இந்த மஞ்சள் பிள்ளையாரை வைத்துக்கொண்டு அட்சதையை கொஞ்சம் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த அட்சதையை பயன்படுத்தி விநாயகப் பெருமானின் 108 போற்றிகளை கூறி இந்த மஞ்சள் பிள்ளைகளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
அடுத்ததாக ஓம் கம் கணபதியே நமஹ என்னும் மந்திரத்தை 11 முறை கூற வேண்டும். அடுத்ததாக ஓம் சௌம் சௌமியாய கணபதியே நமோ நமஹ என்னும் மந்திரத்தையும் 11 முறை கூற வேண்டும். இப்படி மந்திரங்கள் அனைத்தையும் கூறி அட்சதையால் அர்ச்சனை செய்த பிறகு ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்து வைத்து அதில் சில்லறை காசுகளை பரப்பி அதற்கு மேல் இந்த வெற்றிலையில் இருக்கக்கூடிய மஞ்சள் பிள்ளையாரை வைக்க வேண்டும்.
இவருக்கு கண்டிப்பான முறையில் நெய்வேத்தியம் வைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பொரி உருண்டை வைப்பது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. தீபம் ஏற்றி வைத்து சாம்பிராணி தூபம் போட்ட பிறகு விநாயகர் அகவலை ஒருமுறை நிறுத்தி நிதானத்துடன் படித்து விநாயகர் பெருமானிடம் செல்வவளம் பெருக வேண்டும், நிறைவான குறைவற்ற செல்வத்தை தர வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி இந்த வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.
வழிபாட்டை நிறைவு செய்த பிறகு இந்த பொறி உருண்டையை பிரசாதமாக சாப்பிடுவதோடு எளிமையான உணவுகளை சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டில் தங்களுடைய வாழ்க்கையில் எது அதிக அளவில் கஷ்டத்தை தருகிறதோ அந்த கஷ்டம் நீங்க வேண்டும் என்று விநாயகப் பெருமானிடம் வேண்டுதலை வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வேண்டுதலை வைத்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது அடுத்த சங்கடஹர சதுர்த்திக்குள் அந்த கஷ்டம் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:கோடீஸ்வர யோகம் தரும் அக்ரத சங்கடஹர சதுர்த்தி
மிகவும் சக்தி வாய்ந்த மார்கழி மாதத்தில் வரக்கூடிய இந்த சங்கடஹர சதுர்த்தியை தவறவிடாமல் பயன்படுத்துபவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.