பணத்தை சம்பாதிக்க வேண்டும், சேர்த்து வைக்க வேண்டும் என்றுதான் அனைவருமே ஆசைப்படுகிறோம். ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தை சம்பாதித்தால் போதும் சேர்த்து வைத்தால் போதும் என்று நினைக்கக் கூடாது. நியாயமான வழிமுறைகளை பின்பற்றியே பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். பணத்தை சம்பாதிக்க இயலாத சூழ்நிலையில் பலரும் பல விதங்களில் கஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள். அந்த பணம் தொடர்பான கஷ்டங்கள் அனைத்தையும் நீக்குவதற்கு விநாயகப் பெருமானுக்குரிய தை மாத சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சுக்கிர சங்கடஹர சதுர்த்தி
தை மாதம் என்றாலே அது சிறப்புக்குரிய மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதுவும் தை மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. இந்த தை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி என்பது வருகிறது. பொதுவாக சங்கடஹர சதுர்த்தி என்பது நம்முடைய கஷ்டங்களை நீக்கக்கூடிய சதுர்த்தியாக திகழ்கிறது. அதுவும் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி என்பது நம்முடைய பணம் தொடர்பான கஷ்டங்களை நீக்க உதவும். அப்படி பணம் தொடர்பான கஷ்டங்களை நீக்குவதற்கு விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டை சங்கடஹர சதுர்த்தி நாளான ஜனவரி மாதம் 17ஆம் தேதி காலையில் 4 மணியிலிருந்து 8 மணிக்குள் செய்யலாம். ஒரு வேளை காலை நேரத்தில் செய்ய இயலவில்லை என்னும் பட்சத்தில் மாலை 4 மணியிலிருந்து 8 மணிக்குள் செய்யலாம். வீட்டு பூஜை அறையில் அரச மர இலை அல்லது வெற்றிலையில் விநாயகப் பெருமானை மஞ்சளில் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு வாசனை நிறைந்த மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அவருக்கு மிகவும் உகந்த அருகம்புல்லையும் வைத்துக் கொள்ளுங்கள்.
விநாயகப் பெருமானுக்கு அன்றைய தினம் நெய்வேத்தியமாக வெள்ளை மொச்சை சுண்டலை வைக்க வேண்டும். விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை வைக்க வேண்டும். இதோடு ஒரு அச்சு வெல்லத்தையும் ஒரு வாழைப்பழத்தையும் வைக்க வேண்டும். இப்படி வைத்துவிட்டு அவருக்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு விநாயகப் பெருமாளுக்கு உரிய மந்திரங்களாக அதுவும் குறிப்பாக பணம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய விநாயக மந்திரமாக இரண்டு மந்திரங்கள் இருக்கின்றன. இந்த இரண்டு மந்திரங்களையும் 108 முறை கூறி விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
இப்படி செய்து முடித்துவிட்டு தேங்காய் உடைத்து அந்த தேங்காய் தண்ணீரை வைத்து மஞ்சள் பிள்ளையாருக்கு சிறிதளவு அபிஷேகம் செய்ய வேண்டும். மஞ்சள் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்யும்பொழுது அந்த மஞ்சளானது கரைந்து கீழே வரும். அப்படி கரைந்து வரக்கூடிய மஞ்சளை எடுத்து நம்முடைய நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு விநாயகப் பெருமானுக்கு வைத்த அச்சு வெல்லத்தை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய அரச மரம் அல்லது ஆல மரத்தின் அடியில் வைத்து விட வேண்டும். வேறு எதுவும் அதை செய்யக்கூடாது. வெள்ளை மொச்சை மற்றும் மோதகத்தை வீட்டில் இருக்கக் கூடியவர்களுக்கு பிரசாதமாக தரலாம்.
மறுநாள் அதாவது சனிக்கிழமை அன்று நாம் எடுத்து வைத்திருந்த அந்த மஞ்சள் பிள்ளையாரில் சிறிதளவு மஞ்சளை எடுத்து அதனுடன் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். மீதம் இருக்கக்கூடிய மஞ்சளை துளசி செடியிலோ அல்லது வேறு ஏதாவது செடியிலோ கால்படாதபடி போட்டு விட வேண்டும்.
மந்திரம்
“ஓம் வக்ரதுண்டாய ஹீம் நம
லஷ்மி கணபதி மூலமந்திரம்
ஓம் ஸ்ரீம் கம் சௌம்யாய
கணபதயே வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா!”
இதையும் படிக்கலாமே:பண தட்டுப்பாட்டை நீக்கும் பரிகாரம்
பணம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் முழு மனதோடு வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று இந்த மந்திரங்களை கூறி விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய பணம் தொடர்பான அனைத்து கஷ்டங்களும் நீங்கும் பணவசியம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.