வாழ்க்கையில் நமக்கு நல்லது நடக்கிறது என்றால், அதற்கு நாம் செய்த நல்ல கர்ம வினைகள் காரணமாக இருக்கும். அதே சமயம் வாழ்வில் தொடர்ந்து அடுத்தடுத்த கெடுதல்கள் நடக்கிறது என்றால் அதற்கு, நாம் செய்த கெட்ட கர்ம வினைகள் காரணமாக இருக்கும். இதில் நாம் செய்த கெடுதலின் மூலம், சேர்த்து வைத்திருக்கும் பாவத்தின் மூலம், சேர்த்து வைத்திருக்கும் கெட்ட கர்மாக்களை எல்லாம் கழிக்க என்ன செய்வது. அதற்கான வழிபாட்டையும் முன்னோர்கள் நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள்.
வாழ்க்கையில் நல்லது மட்டுமே நடக்க வேண்டும், நாம் செய்த கெட்ட கர்மாக்களால் நமக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது, எல்லா கெட்ட கர்ம வினைகளும் நம்மை விட்டு விலக வேண்டும் என்றால், நாம் என்ன வழிபாட்டை செய்வது. விதியை மதியால் வெல்ல முடியும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் தான் அபிராமி பட்டர். (பக்தனுக்காக அமாவாசை தினத்தில், அம்பாளே பௌர்ணமி நிலவாக தோன்றிய கதை நாம் எல்லோருக்கும் தெரியும்).
அந்த அபிராமி பட்டர், அபிராமி அன்னையை போற்றி புகழ்ந்து பாடிய அபிராமி அந்தாதி பாடலை எவர் ஒருவர் நம்பிக்கையோடு படுத்து வருகிறாரோ, அவர் செய்த பாவ கணக்குகள் எல்லாம் புண்ணியமாக மாறும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அந்த அபிராமி தாயின் சொரூபம் தான் துர்கை அம்பாள். நம் வீட்டு பக்கத்தில் கோவிலில் இருக்கும் துர்க்கை அம்மனை, அபிராமி தாயாக நினைத்து, அந்த கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு, வழிபாடு செய்து அந்த கோவிலில் அமர்ந்து இந்த பாடலை படித்தாலே போதும். உங்களுடைய கெட்ட கர்மாக்கள் உங்களை விட்டு விலகி ஓடிவிடும்.
அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமை அன்று ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மன் கோவிலில், சாதாரண மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு நீயே சரணாகதி என்று, துர்க்கை அம்மனிடம் வேண்டுதல் வைத்து, துர்க்கையை அபிராமி அன்னையாக பாவித்து, செய்த பாவத்திற்கு எல்லாம் மனமுருகி மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்.
ஆனால், தொடர்ந்து பாவங்கள் செய்து விட்டு அம்பாள் முன்பு நின்று இந்த பாடலை படித்தால் நிச்சயம் புண்ணியம் சேராது. அறியாமல் செய்த தவறுகள், போன ஜென்மத்தில் செய்த தவறுகள் எல்லாம், நம்மை பின்தொடர்ந்து கஷ்டத்தை கொடுக்கும் பட்சத்தில் அந்த பிரச்சனையில் இருந்து வெளிவரத்தான் இந்த பரிகாரம் . செய்த பாவங்கள் தீர வேண்டும் என்றால் நீங்கள் படிக்க வேண்டிய அபிராமி அந்தாதியின் 12வது பாடல் வரிகள் இதோ உங்களுக்காக.
அபிராமி அந்தாதி 12 வது பாடல்
கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே! புவி ஏழையும் பூத்தவளே!
இதையும் படிக்கலாமே: 19-01-2025 தேய்பிறை சஷ்டி வழிபாடு
நம்பிக்கையோடு ஒரு 11 செவ்வாய்க்கிழமை, 21 செவ்வாய்க்கிழமை இந்த பாடலை படித்து பாருங்கள். உங்களுடைய தலைவிதி எவ்வளவு கொடுமையாக கிறுக்கப்பட்டு இருந்தாலும், அந்த விதியை அழகாக மாற்றும் சக்தி இந்த பாடலுக்கும் இந்த வழிபாட்டிற்கும் உண்டு. இதுவரை நல்லதே நடக்காத உங்கள் வாழ்க்கையிலும் நல்லது நடக்கும். என் வாழ்வில் நல்லதே நடக்காதா என்று வாழ்க்கையை சோதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பக்தர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.