நம்முடைய வாழ்க்கையை வாழ்வதற்கு நமக்கு தேவையான மிகவும் முக்கியமான ஒன்றாக தான் பணம் திகழ்கிறது. பணம் இல்லாமல் இந்த உலகத்தில் யாராலும் வாழவே முடியாது என்று கூட கூறலாம். அதனால் தான் அனைவருமே பணத்தை சம்பாதிப்பதற்காக பலவிதமான வழிகளில் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். பலருக்கும் அந்த முயற்சிகள் வெற்றி அடைந்து அதன் மூலம் பணவரவு உண்டாகும். ஆனால் ஒரு சிலருக்கு எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் அந்த முயற்சிகள் வெற்றி அடையாமல் ஏதாவது ஒரு தடைகள் ஏற்பட்டு பணவரவு இல்லாமல் வறுமையில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எந்த தீபத்தை ஏற்றினால் பணவரவு அதிகரிக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணவரவு உண்டாக தீபம்
நம்முடைய குலதெய்வத்தை நினைத்தோ அல்லது இஷ்ட தெய்வத்தை நினைத்தோ நாம் செய்யக்கூடிய வழிபாடுகளில் மிகவும் முக்கியமான ஒரு வழிபாடு தீப வழிப்பாடு. இந்த தீப வழிபாட்டை முழு மனதுடன் யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் எந்த தெய்வத்தை நினைத்து செய்கிறார்களோ அந்த தெய்வம் அந்த தீபத்திலேயே வந்து குடியேறி அருள் ஆசி புரியும் என்று கூறப்படுகிறது. அப்படி பணவரவை ஏற்படுத்துவதற்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ளப் போகிறோம்.
இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு ஒரு எண்ணெய் தேவைப்படும். அந்த எண்ணெயை நாம் தான் தயார் செய்ய வேண்டும். இந்த எண்ணெயை தயார் செய்வதற்கு நமக்கு மூன்று விதமான எண்ணெய்கள் வேண்டும். நல்லெண்ணெய், பசு நெய், தேங்காய் எண்ணெய் இவை மூன்றையும் சரிசமமான அளவு கலந்து ஒரு பாட்டிலில் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு லிட்டர் அளவிற்கு இந்த எண்ணெயை தயார் செய்து வைத்தீர்கள் என்றால் 30 கிராம் அளவிற்கு பச்சை கற்பூரத்தை வாங்கி நன்றாக நுணுக்கி பொடி செய்து அந்த எண்ணெயில் கலந்து வைத்து விட வேண்டும்.
என்றைக்கு நீங்கள் தீபம் ஏற்றுகிறீர்களோ அதற்கு முதல் நாளே இந்த எண்ணெயை தயார் செய்து வைக்க வேண்டும். அதாவது இந்த எண்ணெயை தயார் செய்து வைத்து 24 மணி நேரம் கழித்துதான் தீபம் ஏற்ற வேண்டும். அப்பொழுதுதான் பச்சை கற்பூரம் முழுமையாக அந்த எண்ணெயில் கரைந்து இருக்கும். இந்த தீபத்தை ஏற்றக்கூடிய நாள் எந்த நாளாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த நாள் உங்களுடைய நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாகவும் கரிநாள் இல்லாத நாளாகவும் இருந்தால் போதும்.
இந்த தீபத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றலாம் அல்லது மாலை 5:30 மணியில் இருந்து 6:30 மணிக்குள் ஏற்றலாம். வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாள தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் இரண்டு அரச இலைகளை வைக்க வேண்டும். இந்த அரச இலைகளை பறித்து வந்து மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த அரசு இலையின் நுனியில் சந்தனம் குங்குமம் வைத்து அதை தாம்பாள தட்டின் மீது வைத்துக் கொள்ள வேண்டும். அந்த இலைக்கு மேல் இரண்டு அகல் விளக்குகளை வைத்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் அந்த எண்ணையை ஊற்றி அதில் பஞ்சுத்திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.
உங்களுடைய இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு இந்த தீபத்தை ஏற்றி பண வரவு அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன் வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ச்சியாக 48 நாட்கள் இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் வீட்டில் தெய்வ ஆகர்ஷணம் உண்டாகி பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். வறுமை முற்றிலும் நீங்கும்.
இதையும் படிக்கலாமே:வறுமை நீங்க மந்திரம்
எப்பொழுதும் ஏற்றக்கூடிய தீபத்தை தவிர்த்து கூடுதலாக இந்த இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்வதன் மூலம் அந்த வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி தெய்வ சக்தி அதிகரித்து பணவரவில் இருக்கக்கூடிய தடைகளை விலக்கும், வறுமையை முற்றிலும் நீக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.