வெற்றிலை மங்களகரத்தின் அடையாளமாக திகழ்கிறது. எல்லா விசேஷ பூஜைகளிலும் வெற்றிலை கட்டாயம் இடம் பெறும். வெற்றிலை இல்லாமல் பூஜைகள் தூங்குவதுமில்லை, நிறைவதும் இல்லை. வெற்றிலை தாம்பூலம் வைத்து நல்ல காரியம் செய்யும் பொழுது, அந்த காரியம் வெற்றி பெறும் என்பது சாஸ்திரங்கள் சொல்லும் ஐதீகம். இப்படியான வெற்றிலையை மகாலட்சுமிக்கு தீர்த்தம் வைத்து வழிபடும் முறையும், அதன் பலன்களை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களையும் தொடர்ந்து இப்பதிவின் மூலம் அறிவோம் வாருங்கள்.
எல்லா விசேஷங்களுக்கும் முதன்மையான இடம் பெறும் இந்த வெற்றிலை கொடி போன்று படர்ந்து வளரக்கூடியது. வீட்டில் வெற்றிலை கொடி வைத்திருந்தால், அந்த வீட்டில் சுப நிகழ்வுகளுக்கு தடை இருக்காது என்பார்கள். மங்களகரமான இந்த வெற்றிலையில் தீர்த்தம் வைத்து வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை வழிபட உங்களுக்கு இப்போது இருக்கும் பணக்கஷ்டம் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.
வெள்ளிக்கிழமையில் அதிகாலையில் எழுந்து நீராடி சுத்தபத்தமாக பூஜை அறையை அலங்கரித்து மகாலட்சுமியை பூஜையில் வையுங்கள். தீர்த்த கலசம் ஒன்றை தயார் செய்ய வேண்டும். பித்தளை அல்லது செம்பு கலசம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிய பாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை. அதில் சுத்தமான தண்ணீர் ஊற்றி நிரப்பி வையுங்கள்.
இப்போது கலசத்தில் கொஞ்சம் மஞ்சள் தூள், கொஞ்சம் ஜவ்வாது தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இவற்றுடன் இரண்டு துண்டு நன்னாரி வேர், வெட்டி வேரையும் சேர்க்கலாம். பின்னர் முக்கியமாக சேர்க்க வேண்டிய ஒரு பொருள் பச்சை கற்பூரம் ஆகும். சிறு துண்டு பச்சை கற்பூரத்தை நுணுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். தெய்வீக வாசம் மணக்க ஆரம்பிக்கும். இப்போது கடைசியாக ஒரு நல்ல வெற்றிலையாக பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
நிறம் மாறாத பச்சை வெற்றிலையை சுத்தம் செய்துவிட்டு, அதன் நுனிப்பகுதியை கலசத்திற்குள்ளும், காம்பு பகுதியை மேல் நோக்கியும் இருக்குமாறு வைக்க வேண்டும். இந்த கலசத்தை மகாலட்சுமியின் முன்பு வைத்து மகாலட்சுமிக்கு கற்கண்டு, பாயாசம், சர்க்கரை பொங்கல் போன்றவற்றில் உங்களால் முடிந்தவற்றை நைவேத்தியம் படைத்து தீபம் ஏற்ற வேண்டும். மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றும் பொழுது ஒற்றை திரி போடக்கூடாது. ரெண்டு திரியை ஒன்றாக போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றபவர்கள் நல்லெண்ணெய் அல்லது நெய் உற்றி தீபம் ஏற்றுங்கள். மற்ற எண்ணெய்களை பயன்படுத்த வேண்டாம். தீபம் ஏற்றி மனதார பிரார்த்தனை செய்து கொண்ட பின்பு கலசத்தில் இருக்கும் தீர்த்தத்தை வெற்றிலையால் வீடுகளில் இருக்கும் மூலை, முடுக்குகள் விடாமல் எல்லா இடங்களிலும் தெளிக்க வேண்டும். கலசத்தில் இருக்கும் தீர்த்தம் மிகவும் புனிதமானது. இந்த வெற்றிலை தீர்த்தம் பணக்கஷ்டத்தை தீர்க்க வல்லது. வீட்டில் இருக்கும் துர்சக்திகளையும், தீய எண்ணங்களையும் விரட்டி அடித்து நம் மனதை தூய்மையாக்க வல்லது.
இதையும் படிக்கலாமே:
வறுமை நீங்கும் மீனாட்சி அம்மன் வழிபாடு
இந்த தீர்த்தத்தை எல்லா இடங்களிலும் தெளித்த பின்பு பூஜையை நிறைவு செய்யுங்கள். இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் செய்து வர வேண்டும். இதனால் குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்கி, செல்வம் அதிகரிக்க ஆரம்பிக்கும். உங்களுடைய உழைப்பில் இருந்த தடைகள் நீங்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் உங்களுடைய தொழில் செய்யும் இடங்களிலும் இந்த வெற்றிலை தீர்த்தத்தை தயார் செய்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து, பின் எல்லா இடங்களிலும் தெளித்து வர நல்ல லாபம் பெருகும்.