என்றும் சிரஞ்சீவி பட்டத்தை பெற்றவர் ஆஞ்சநேயர் என்று நம் அனைவருக்கும் தெரியும். இன்றளவும் இந்த பூலோகத்தில் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்றும் புராணங்கள் கூறுகிறது. ராம நாமம் வைகுண்டத்தில் கேட்காது என்ற ஒரே காரணத்திற்காக வைகுண்டம் செல்லாமல் இந்த பூலோகத்திலேயே வீற்றிருக்கக் கூடிய ஒரு அற்புதமான கடவுளாக தான் ஆஞ்சநேயர் திகழ்கிறார். காரிய தடைகளை நீக்கி நமக்கு பாதுகாப்பை தரக்கூடிய தெய்வமாகவும் ஆஞ்சநேயர் திகழ்கிறார். அப்படிப்பட்ட ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தமான வெற்றிலை மாலையை எந்த கிழமையில் சாற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வெற்றிலை மாலை பலன்கள்
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமான பொருட்கள் பிடித்தமான பொருட்களாக இருக்கும் அந்த பொருட்களை பயன்படுத்தி அந்த கடவுளுக்கு மாலை சாற்றி வழிபாடு செய்வது அல்லது நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்வது போன்ற வழிபாட்டு முறைகளை நாம் பின்பற்றுவோம். அந்த வகையில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெண்ணெய், செந்தூரம், வெற்றிலை மாலை, துளசி மாலை போன்றவற்றை சாற்றும் பலவிதமான முறைகள் இருக்கின்றன. இந்த முறைகளில் பலரும் பின்பற்றக்கூடிய ஒருமுறைதான் வெற்றிலை மாலை சாற்றுவது. வெற்றிலை மாலை சாற்றுவதால் வெற்றிகள் உண்டாகும் என்பது பொதுவான பலன் என்றாலும் எந்த கிழமையில் எந்த நேரத்தில் சாற்றுகிறோம் என்பதை பொறுத்து அந்த வெற்றிலை மாலைக்குரிய பலன் என்பது மாறுபடும்.
ஒவ்வொரு கிழமைக்கும் அதற்குரிய ஹோரையில் நாம் இந்த வெற்றிலை மாலையை சாற்ற வேண்டும். அதாவது காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் அந்த கிழமைக்குரிய ஹோரை என்பது வரும். அந்த நேரத்தில் ஆஞ்சநேயருக்கு நாம் வெற்றிலை மாலை சாற்ற வேண்டும். இதற்கு நமக்கு 11 எண்ணிக்கையில் வெற்றிலைகள் இருந்தால் போதும். கிழியாத நல்ல வெற்றிலையாக பார்த்து வாங்கி அதை மஞ்சள் தண்ணீரில் சுத்தமாக கழுவி ஈரம் இல்லாமல் துடைத்துக்கொள்ளுங்கள். பிறகு பச்சை நிற நூலை வைத்து மாலையாக கட்டிக் கொள்ளுங்கள்.
ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று அவருக்கு சாற்றி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இயன்றவர்கள் தயிர் சாதத்தை நெய்வேத்தியமாக வைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம். இதை தொடர்ச்சியாக 11 வாரங்கள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது எந்த கிழமை சாற்றினால் என்ன பலன் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றுவதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய எப்பேற்பட்ட தோஷமாக இருந்தாலும் அந்த தோஷம் நீங்கும். திங்கட்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றுவதன் மூலம் மனம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும், மன சங்கடம், மனநோய் அகலும். செவ்வாய்க்கிழமை வெற்றிலை மாலை சாற்றுவதன் மூலம் வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதரர்களுக்கிடையே நல்ல உறவு மேம்படும்.
புதன்கிழமை வெற்றிலை மாலை சாற்றுவதன் மூலம் சிறப்பான வேலை கிடைக்கும். வியாழக்கிழமை வெற்றிலை மாலை சாற்றுவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைப்பதோடு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றமும் உண்டாகும். வெள்ளிக்கிழமை வெற்றிலை மாலை சாற்றுவதன் மூலம் சுகவாழ்வு கிடைக்கும். சனிக்கிழமை வெற்றிலை மாலை சாற்றுவதன் மூலம் சுய தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாவதோடு கர்ம வினைகளும் நீங்கும்.
இதையும் படிக்கலாமே: கர்ம வினைகளை நீக்கும் சிவ வழிபாடு
நமக்கு என்ன வேண்டுதல் இருக்கிறதோ அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால் அதற்குரிய நாளில் ஆஞ்சநேயரை முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.