நாம் ஒவ்வொருவரும் இந்த பிறப்பு எடுத்ததற்கு காரணமே நம்முடைய கர்மவினைகள் தான். முன் ஜென்மத்தில் நாம் செய்த கர்ம வினைகளின் பலனால் தான் இந்த ஜென்மத்தில் ஜனனம் எடுத்து நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அப்படி வாழக்கூடிய இந்த வாழ்க்கை நல்ல வாழ்க்கையாக அமைவதற்கு நம்முடைய கர்ம வினைகள் முற்றிலும் தீர வேண்டும். கர்ம வினைகள் தீருவதற்கு பலவிதமான பரிகார முறைகள் இருந்தாலும் வழிபாட்டு முறைகளையும் நாம் பின்பற்ற வேண்டும். மேலும் பாவங்கள் எதையும் செய்யாமல் நம்மால் இயன்ற அளவு பிறருக்கு உதவியை செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் தீரும். கர்ம வினைகள் தீருவதற்காக நாம் வழிபடக்கூடிய தெய்வங்கள் பல இருந்தாலும் நம்முடைய கர்ம வினையை தீர்ப்பதற்குரிய முக்கியமான தெய்வமாக திகழக்கூடியவர் சிவபெருமான்தான். அப்படிப்பட்ட சிவபெருமானை எந்த முறையில் வழிபாடு செய்தால் நம்முடைய கர்ம வினைகள் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கர்ம வினைகளை நீக்க வழிபாடு
முப்பெரும் தேவர்கள் என்று கூறக்கூடிய பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் இவர்கள் மூவரும் மூன்று தொழில்களை செய்கிறார்கள் என்றும் அந்த மூன்று தொழில்களில் ஒன்றான அழித்தல் தொழிலை செய்யக்கூடியவர் தான் சிவபெருமான் என்றும் கூறப்படுகிறது. அழிக்கக்கூடிய தன்மை மிகுந்தவர் என்பதால் பலரும் அவரை வழிபாடு செய்வதற்கு ஆரம்பத்தில் யோசித்தார்கள். ஆனால் இந்த அழித்தல் என்பது நம்முடைய கர்ம வினைகளை அழிக்கக்கூடியது என்பதை தெரிந்த பிறகு பலரும் சிவபெருமானை வழிபாடு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இருப்பினும் நம்முடைய கர்ம வினைகளை நீக்குவதற்கு சில சூட்சுமமான வழிபாட்டு முறை இருக்கிறது. அவற்றில் ஒன்றை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
இந்த வழிபாட்டை சனிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். சனிக்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய சிவபெருமான் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்பொழுது சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காக நல்லெண்ணெய் நான்கு லிட்டர் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அதனால் அன்றைய தினம் எப்பொழுது அபிஷேகம் செய்வார்கள் என்பதை கேட்டுக் கொண்டு அதற்கு முன்பாகவே நல்லெண்ணையை வாங்கிக் கொண்டு போய் கொடுக்க வேண்டும்.
பிறகு சிவபெருமானின் ஆலயத்தில் 11,:21, 54, 108 என்ற எண்ணிக்கையில் தங்களால் எந்த எண்ணிக்கையில் தீபம் ஏற்ற முடியுமோ அந்த எண்ணிக்கையில் நல்லெண்ணெய் தீபத்தை ஏற்ற வேண்டும். இவ்வாறு ஏற்றி முடித்த பிறகு தங்களுடைய பெயரிலும் தங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்களின் பெயரிலும் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். மேலும் அன்றைய தினம் தயிர் சாதம், புளி சாதம் போன்ற ஏதாவது ஒரு சாதத்தை செய்து சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக வைத்து படைத்துவிட்டு அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். இந்த முறையில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் சிவபெருமானின் அருளால் நம்முடைய கர்ம வினைகள் முற்றிலும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:பங்குனி உத்திர நாளன்று வாங்க வேண்டிய பொருட்கள்
சிவபெருமானை முழுமனதோடு இந்த முறையில் வழிபாடு செய்யக்கூடிய நபர்களின் கர்ம வினைகள் முற்றிலும் நீங்குவதோடு அவர்களின் வாழ்க்கையில் பலவிதமான நல்ல முன்னேற்றங்களும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.