சொந்தமாக நிலம் வாங்கி அதன் பின்பு அதில் வீடு கட்ட வேண்டும் என்பது கொஞ்சம் சிரமமான காரியம் தான். நிலம் விற்கும் விலைக்கு அதை வாங்குவதற்கே லோன் போட வேண்டி இருக்கிறது. ஆனால் கைவசம் நிலம் இருந்தும், சிலரால் வீடு கட்ட முடியாத நிலையில் இருப்பார்கள். சொந்த நிலம் வைத்திருப்பவர்கள் அதில் சொந்தமாக வீடு கட்டிக் குடியேற செய்ய வேண்டிய எளிய வாஸ்து பரிகாரம் பற்றிய தகவல்களை தொடர்ந்து இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம், வாருங்கள்.
நிலம் வைத்திருப்பவர்கள் அதில் வீடு கட்ட முடியாமல் இருந்தால் நல்ல நாள், சுப முகூர்த்தமாக பார்த்து அந்த நிலத்திற்கு செல்லுங்கள். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் இந்த பரிகார பூஜையை செய்ய வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் எந்தவிதமான தோஷங்களுக்கும் இடமில்லை! சூரியன் உதிக்கும் முன்பே பிரம்ம முகூர்த்தத்தில் நிலத்திற்கு சென்று அங்கு உங்கள் நிலத்தின் திசைக்கு ஏற்ப எந்த இடத்தில் நீங்கள் பூஜை அறையை அமைக்க வேண்டும்? என்பதை வாஸ்து நிபுணர்கள் அல்லது புரோகிதர்களிடம் அறிந்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
வீடு கட்டும் பொழுது பூஜை அறை அமைய இருக்கும் அந்த இடத்தில் கீழ் வரும் இந்த பொருட்களை வைத்து பரிகாரம் செய்யுங்கள். பூமியில் சிறு பள்ளத்தை தோண்டி அதில் கொஞ்சம் மஞ்சள், கொஞ்சம் சந்தனம், கொஞ்சம் குங்குமத்தை வையுங்கள். பின்னர் இதனுடன் ஒரு கலசத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்து ஊற்ற வேண்டும். அதில் கொஞ்சம் துளசி இலைகளும், வேப்பிலை இலைகளையும் போடுங்கள். பசுவின் கோமியம் இருந்தால் அதையும் சிறிதளவு ஊற்றுங்கள்.
பின்னர் மண்ணை போட்டு மூடி உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை மனதார பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். “ஓம் வாஸ்து புருஷாய நம” என்னும் இந்த மந்திரத்தை சொல்லி வேளாண் செய்த பச்சை காய்கறிகள் நிலத்தின் மீது வைக்க வேண்டும். உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு காய்கறியை கொண்டு போய் மண்ணின் மீது வைத்து பூஜையை நிறைவு செய்யுங்கள்.
பின்னர் சக்தி வாய்ந்த வாஸ்து எந்திரம் ஒன்றை வாங்கிக் கொண்டு போய் உங்கள் பூமியின் கிழக்கு திசையில் புதைக்க வேண்டும். வாஸ்து எந்திரம், வாஸ்து குறைகளை அகற்றி சீக்கிரமே வீடு கட்டுவதற்கு உரிய நற்பலன்களை உங்களுக்கு வாஸ்து புருஷரால் வாரி வழங்கப்படும். எந்திரம் புதைத்த அந்த இடத்தில் புதிதாக வாங்கிய செங்கல் ஒன்றை வைக்க வேண்டும். செங்கல்லை தண்ணீரால் அபிஷேகம் செய்து அதற்கு சந்தன, குங்குமம் இட்டு நட்டு வையுங்கள்.
இதையும் படிக்கலாமே:
லாபம் பெருக வியாபாரிகள் சொல்ல வேண்டிய மந்திரம்
அவ்வளவுதான் பரிகாரம் முடிந்து விட்டது. இந்த பரிகாரத்தை செய்துவிட்டு வேறு எங்கும் வழியில் செல்லாமல், உங்கள் வீட்டிற்கு நேராக செல்லுங்கள். உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு ஏற்ப சுப நாட்களில் கூட இந்த பரிகாரத்தை நீங்கள் செய்துவிட்டு வரலாம். சக்தி வாய்ந்த இந்த எளிய வாஸ்து பரிகாரத்தை செய்வதன் மூலம் நிலம் வைத்திருப்பவர்கள் உடனே தங்களுடைய நிலத்தில் வீடு கட்டும் பாக்கியம் குலதெய்வ அருளாலும், வாஸ்து பகவானாலும் பெறுவீர்கள் என்பது நம்பிக்கை.