சாஸ்திரங்கள் வஸ்திர தானத்தை மிகப்பெரிய நன்மைகள் கொடுக்கக்கூடிய தானமாக சொல்லுகிறது. வஸ்திர தானத்தை பொறுத்தவரை 2 வகைகள் உண்டு. புதிய வஸ்திரங்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பது, பழைய வஸ்திரங்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பது ஆகும். இதில் பழைய வஸ்திரங்களை தானமாக கொடுப்பது சாஸ்திரப்படி தர்மமா? என்னும் ஆன்மீகம் சார்ந்த கேள்விக்கு விடை பகிர்வோம் வாருங்கள்.
சாஸ்திரங்கள் பொதுவாக புதிய ஆடைகள் தானமாக கொடுக்கப்பட வேண்டும் என்பதே வலியுறுத்துகின்றன, குறிப்பாக மத சடங்குகள் அல்லது பித்ரு திதி, ஹோமங்கள் போன்ற தர்ம பணி தருணங்களில் வஸ்திர தானம் செய்கிறோம். பழைய ஆடைகள் தர்ம பணி என்பதற்குப் பதிலாக உபகார பணி (social service) ஆகவே பார்க்கப்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
ஒருவருக்கு நீங்கள் மனம் உவந்து புண்ணியத்திற்காக ஏழை எளியவர்களுக்கு புதிய வஸ்திரங்களை தானம் செய்தால் அது தான் தர்மம் ஆகும். பழைய வஸ்திரங்களை, நீங்கள் உபயோகப்படுத்தி விட்டு கொடுக்கும் வஸ்திரங்களை தானம் செய்வது உபகாரப்பணி அதாவது அது கருணைக் கொண்டு நீங்கள் செய்யும் ஒரு பேருதவியாக கருதப்படுகிறது, ஆனால் அது தர்மம் ஆகாது என்பது தான் நிதர்சனமான உண்மை.
நம் சமூகத்தில் ஏழைகள், ஆதரவற்றோர்கள், அகதிகள், குழந்தைகள் காப்பகங்கள், ஆசிரமங்கள், முதியோர் இல்லங்கள் என்று பலருக்கும் பழைய துணிமணிகள் தானமாக தேவைப்படுகிறது. இந்த மையங்களில் மற்றவர்கள் பயன்படுத்திய நல்ல நிலையில் இருக்கக்கூடிய துணிமணிகளை தானம் செய்வது சமூக கடமையாகிறது. ஒருவருடைய குப்பை, மற்றவர்களுக்கு புதையல் ஆகும் என்பது போல தான் இந்த பழைய வஸ்த்திரங்களை தானம் செய்வதும்!
இதன் மூலம் உண்மையான தேவை உள்ளவர்களுக்கு நிவாரணம் தர முடியும்.
இது சாஸ்திர புண்ணியம் அளிக்காவிட்டாலும், மனப்பூர்வ கருணை கொண்டு செய்யும் உதவியாக கருதப்படுகிறது. இத்தகைய செயல் மன அமைதியும், ஆனந்த உணர்வும் நமக்கு தரும். சுருக்கமாக, பழைய துணிகளை தர்மமாக வழங்குவது சாஸ்திர ரீதியாக உயர்தரமான தானமாக கருதப்படாவிட்டாலும், நிஜ வாழ்க்கையில் அது ஒரு மிகப் பெரிய உதவியாகவும், நற்காரியமாகவும் அமைகிறது.
நீங்கள் கொடுக்கும் துணிமணியானது உபயோகப்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட வஸ்திரங்கள் அழுக்குகள், கழிவுகள் மற்றும் கிழிந்து போனவையாக இருக்கக் கூடாது, இது மகா பாவம் ஆகும். இந்த பாவத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் தண்டனைகள் கிடைக்கும். வஸ்திரங்களால் உண்டாகக்கூடிய சாபத்தை அவர்கள் அனுபவிப்பார்கள்.
ஏழை எளியவர்கள், ஆதரவற்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வஸ்திர தானம் செய்யும் பொழுது நல்ல நிலையில் நீங்கள் பயன்படுத்திய துணிமணிகள் இருக்கிறதா? என்பதை ஒரு முறைக்கு இருமுறை பரிசோதித்துக் கொள்ளுங்கள். முடிந்தால் வருடம் ஒரு முறையாவது இத்தகையவர்களுக்கு புதிய வஸ்திரங்களை வாங்கி மனதார தானம் செய்து பாருங்கள், உங்களுக்கு இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஆதரவற்ற முதியவர்களுக்கு செய்யும் வஸ்திர தானம் பன்மடங்கு புண்ணியத்தை சேர்க்கக் கூடியது.
இதையும் படிக்கலாமே:
ராகு கேது பெயர்ச்சி பலன் 2025
பெற்றோர்கள் பிள்ளைகளை கை விடுவதில்லை ஆனால் பிள்ளைகள் பெரும்பாலும் இன்றைய உலகில் பெற்றவர்களை கைவிட்டு விடுகிறார்கள். தள்ளாடும் வயதில் பிள்ளைகள் கைவிட்ட நிலையில் இருக்கக்கூடிய இத்தகையவர்களுக்கு, நீங்கள் செய்யும் சிறு உதவியும், இறைவனின் தர்ம புஸ்தகத்தில் மிகப்பெரிய புண்ணியத்தை எழுதி வைக்கும் என்பது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள உண்மையாகும்.