ஒரு சிலருக்கு பணத்திற்கு எந்தவித குறையும் இருக்காது. சொத்துக்களும் அதிகமாகவே இருக்கும். இருப்பினும் ஒரு சில பிரச்சனைகளால் அவர்கள் மனநிம்மதி இழந்து வாடிக்கொண்டு இருப்பார்கள். எப்படியாவது அந்த பிரச்சனை தீர வேண்டும் என்று என்னென்னவோ செய்வார்கள். அப்படி தீர்க்க முடியாத பிரச்சினையை தீர்ப்பதற்கு சித்ரா பௌர்ணமி நாளன்று சிவபெருமானுக்குரிய முக்கனண் தீபத்தை ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அந்த முக்கண் தீபத்தை எப்படி ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பிரச்சினைகள் தீர முக்கண் தீப வழிபாடு
இந்த வருடம் சித்ரா பௌர்ணமி என்பது மே மாதம் 12ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. திங்கட்கிழமை என்பது சிவபெருமானுக்கு எப்படி உகந்த கிழமையோ அதே போல் தான் சந்திர பகவானுக்கும் உகந்த கிழமையாக திகழ்கிறது அன்று பௌர்ணமி வருவது என்பது அதீத சிறப்பை தரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த நாளை நாம் சரியாக பயன்படுத்தினோம் என்றால் நம்மால் தீர்க்கவே முடியாது என்று நினைத்த பிரச்சனையும் எளிதில் தீர்ந்து விடும்.
இந்த வழிபாட்டை மாலை நேரத்தில் சந்திரன் வானத்தில் பிரகாசமாக தெரியும் பொழுது செய்ய வேண்டும். பொதுவாக மாலை 6 மணிக்கு மேல் சந்திர தரிசனத்தை நம்மால் காண முடியும் என்பதால் மாலை நேரத்தில் இந்த முக்கண் தீப வழிபாட்டை செய்ய வேண்டும். இதற்கு நமக்கு தேவைப்படக்கூடியது ஒரு தேங்காய். தேங்காய் என்பது சிவபெருமானின் அம்சம் கொண்டதாக திகழ்கிறது. சிவபெருமானுக்கும் தேங்காய்க்கும் பல விதமான விஷயங்கள் ஒத்துப் போவதாகவே இருக்கும்.
சிவபெருமானுக்கும் மூன்று கண்கள் தேங்காய்க்கும் மூன்று கண்கள், சிவபெருமான் தன்னுடைய உடல் முழுவதும் விபூதியை பூசி வெண்மையாக திகழ்வார் தேங்காயை உடைத்தால் தேங்காய்குள்ளும் வெண்மையான நிறம் என்பது இருக்கும், சிவபெருமான் தன்னுடைய தலையில் கங்கையை வைத்திருக்கிறார் தேங்காயோ தனக்குள் இளநீரை வைத்திருக்கிறது. இப்படி சிவபெருமானுக்கும் தேங்காய்க்கும் பலவிதமான விஷயங்கள் ஒத்துப் போவதை நம்மால் கண்டறிய முடியும் மேலும் தேங்காய் என்பது பிரபஞ்சத்துடன் நேரடியாக தொடர்புடைய காய் என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட தேங்காயை வைத்து தான் நாம் தீபம் ஏற்ற போகிறோம். இதற்கு வீட்டு பூஜை அறையில் அகல் விளக்கை வைத்து அந்த அகல் விளக்கிற்கு மேல் ஒரு முழு தேங்காயை வைத்துக் கொள்ளுங்கள். அதன் குடும்பி கிழக்குப் பார்த்தவாறு இருக்க வேண்டும். இப்பொழுது அந்த தேங்காயின் நடுப்பகுதியில் கெட்டியாக குலைத்த மஞ்சளை வைத்து அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அதாவது அகல் விளக்கு சாயாமல் நேராக இருப்பதற்காக நாம் மஞ்சளை வைக்கிறோம். அதற்கேற்றார் போல் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் பசு நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து கொண்டு நம்முடைய வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ அவை அனைத்தையும் அந்த தீபத்தை நாம் சிவபெருமானாக பாவித்து கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு அதை அப்படியே பூஜை அறையில் வைத்து விட்டு நாம் நம்முடைய வேலையை பார்க்கலாம். இந்த தீபம் தானாக குளிரட்டும் தேங்காய் அப்படியே இருக்கட்டும்.
மறுநாள் அகல் விளக்கை எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளலாம். தேங்காயை எடுத்து சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் நாம் திங்கட்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சித்ரா பௌர்ணமி நாளன்று முக்கண் தீபத்தை ஏற்றி அந்த தீபத்திடம் நம்முடைய பிரச்சனைகளை கூறும் பொழுது அது நேரடியாக சிவபெருமானின் காதுகளுக்கு சென்றடைந்து விரைவிலேயே அந்தப் பிரச்சினை தீரும்.
இதையும் படிக்கலாமே: பணப் பிரச்சினையையும் மனப்பிரச்சினையையும் தீர்க்கும் சந்திர வழிபாடு
சக்தி வாய்ந்த தீபங்களில் ஒன்றாக திகழக்கூடிய இந்த முக்கண் தீபத்தை முழு மனதோடு சித்ரா பௌர்ணமி நாளன்று சிவபெருமானை நினைத்து ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய நீண்ட நாள் பிரச்சினைகள் தீர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.