இந்த உலகத்தில் பிறப்பெடுத்த ஒவ்வொரு ஜீவராசியும் ஏதாவது ஒரு துன்பத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறது. மனிதர்களை பொறுத்தவரை அவர்களுக்கு பலவிதமான துன்பங்கள் இருக்கும். ஒவ்வொருவருடைய கர்மவினையின் அடிப்படையில் தான் அந்த துன்பங்களும் மாறுபடும். அப்படிப்பட்ட துன்பங்களில் இருந்து விடுபடவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவும் தேய்பிறை ஏகாதசி நாளன்று பெருமாளை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
துன்பங்களை நீக்க பூஜை
பெருமாளை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக கருதப்படுவது ஏகாதசி. விரதங்களில் மிகவும் புனிதமான விரதமாக கருதப்படுவதும் ஏகாதசி விரதம் தான். இந்த முறை தேய்பிறை ஏகாதசி என்பது சனிக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. சனிக்கிழமை என்பது பெருமாளை வழிபாடு செய்வதற்குரிய கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். அதனால் சனிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய தேய்பிறை ஏகாதசி நாள் அன்று பெருமாளை நாம் எந்த முறையில் வழிபட்டால் நம்முடைய துன்பங்கள் தீரும் என்றுதான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
ஜூன் மாதம் 21ஆம் தேதி சனிக்கிழமை அன்று விடியற்காலை 3:37 மணிக்கு தொடங்கி மறுநாள் விடியற்காலை 1: 56 மணி வரை ஏகாதசி திதி என்பது இருக்கிறது. அதனால் விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சனிக்கிழமை அன்று விரதம் இருக்க வேண்டும். வழிபாடு செய்பவர்களும் சனிக்கிழமை அன்றுதான் வழிபாடு செய்ய வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் பெருமாளின் சிலை, சாலிகிராமம், சங்கு, கோமதி சக்கரம் போன்ற பெருமாளின் அம்சம் பொருந்திய எந்த பொருட்கள் இருந்தாலும் அதை பன்னீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
இப்படி எதுவும் இல்லை படம் மட்டும்தான் இருக்கிறது என்பவர்கள் பன்னீரால் படத்தை சுத்தம் செய்து சந்தன குங்குமம் வைத்து துளசி மாலை கட்டி போட வேண்டும். பிறகு அவருக்கு நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைக்கலாம். அதிலும் குறிப்பாக மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய லட்டுவை வைப்பது மிகவும் சிறப்பு. பிறகு பெருமாளுக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து பெருமாளை முழு மனதோடு வழிபாடு செய்வதோடு பெருமாளுக்கு உரிய இந்த ஒரு மந்திரத்தையும் 308 முறை கூறி துளசி இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
மேலும் அன்றைய தினத்தில் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய பெருமாளுக்கு துளசி மாலை வாங்கி கொடுத்து வழிபாடு செய்வது என்பது நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தித் தரும். விரதம் இருக்க இயன்றவர்கள் விரதத்தை இருந்து இந்த வழிபாட்டை செய்யலாம். விரதம் இருக்க இயலாதவர்கள் இந்த வழிபாட்டை மட்டுமாவது செய்வது அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பத்தை தீர்க்கும்.
மந்திரம்
“ஓம் நமோ விஷ்ணுவே நமஹ”
இதையும் படிக்கலாமே: சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் மைத்ரேய முகூர்த்தம்
சிறப்பு மிகுந்த விரதங்களில் ஒன்றாக திகழக்கூடிய ஏகாதசி விரதத்தை இருக்க இயலாதவர்கள் கூட இந்த முறையில் வழிபாடு செய்ய பெருமாளின் அருளால் அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.