நம்முடைய வாழ்க்கையில் கடன் என்ற ஒன்று ஏற்பட முக்கியமான கிரகமாக திகழக்கூடியவர்கள் தான் செவ்வாய் பகவானும் சனீஸ்வர பகவானும். இவர்கள் இருவரின் அருளால்தான் ஒருவருக்கு கடன் என்ற பிரச்சினையே வருகிறது. அப்படி என்றால் கடன் பிரச்சினை தீர நாம் இவர்கள் இருவரையும் வழிபாடு செய்ய வேண்டும். அதனால் தான் செவ்வாய்க்கிழமையிலும், சனிக்கிழமையிலும் வரக்கூடிய மைத்ரேய முகூர்த்தத்திற்கு அதிக அளவில் பலன் இருக்கிறது. மற்ற கிழமையில் வரக்கூடிய மைத்ரேய முகூர்த்தத்தை விட பல மடங்கு அதீத சக்தி வாய்ந்ததாக தான் செவ்வாய் மற்றும் சனிக்கிழமையில் வரக்கூடிய மைத்ரேய முகூர்த்தம் திகழ்கிறது. அந்த வகையில் இந்த முறை சனிக்கிழமையோடு சேர்ந்து மைத்ரேய முகூர்த்தம் வருகிறது. அந்த நேரத்தில் நாம் சொல்ல வேண்டிய செவ்வாய் பகவானின் மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
கடன் அடைய மைத்ரேய முகூர்த்தம்
கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல்தான் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கடன் தொடர்பான பிரச்சனைகள் தீர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். இதோடு சனிக்கிழமை அன்று காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பதன் மூலமும் விரைவிலேயே கடன் பிரச்சனை தீர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
அவ்வளவு சிறப்பு வாய்ந்த சனிக்கிழமை அன்று தேய்பிறை ஏகாதசி சேர்ந்து வரக்கூடிய நாளில் மைத்ரேய முகூர்த்தம் வருகிறது. எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது இந்த மைத்ரேய முகூர்த்தம். கடனை அடைக்க வேண்டும் என்றால் பணம் வேண்டும், பணத்தை தரக்கூடியவராக பெருமாள் திகழ்கிறார். பெருமாளுக்கு உரிய திதியாக ஏகாதசி திதி திகழ்கிறது. மேலும் சனிக்கிழமை மைத்ரேய முகூர்த்தம். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து வரக்கூடிய அற்புதமான இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
மைத்ரேய முகூர்த்தம் என்பது ஜூன் மாதம் 21ஆம் தேதி விடியற்காலை 1:33 மணியிலிருந்து 3:20 மணி வரை இருக்கிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் நாம் அலாரம் வைத்து எழுந்து இந்த வழிபாட்டை செய்துவிட்டு பிறகு படுத்து உறங்கலாம். இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஒன்பது ஒரு ரூபாய் நாணயம் இருந்தால் போதும். இதை இரவே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் முகத்தை கழுவ வேண்டும், பல் தேய்க்க வேண்டும் என்று எதுவும் அவசியம் இல்லை. எழுந்து அமைதியாக அமர்ந்து கொண்டு வலது கையில் அந்த ஒன்பது ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக்கொண்டு முதலில் செவ்வாய் பகவானையும், முருகப்பெருமானையும் மனதார கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு பின் வரும் இந்த செவ்வாய் பகவானின் மந்திரத்தை குறைந்தபட்சம் 10 நிமிடம் கூற வேண்டும். பத்து நிமிடம் கூறி முடித்த பிறகு திரும்பவும் செவ்வாய் பகவானையும் முருகப்பெருமானையும் நினைத்து கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு கையில் இருக்க கூடிய இந்த நாணயங்களை ஒரு கவரிலோ அல்லது பேப்பரிலோ போட்டு மடித்து சுத்தமான இடத்தில் வைத்து விடுங்கள். எப்பொழுது உங்களுடைய கடன் பிரச்சினைகள் முற்றிலும் தீர்வுகிறதோ அப்பொழுது இந்த நாணயங்களை அருகில் இருக்கக்கூடிய ஆலயத்தில் யாசகம் கேட்பவருக்கு தானமாக தர வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் நாளைய தினம் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு நல்லெண்ணெய் வாங்கி தருவதும், காகத்திற்கு கருப்பு உளுந்தை உணவாக தருவதும் விரைவிலயே கடன் பிரச்சினை தீர்ப்பதற்கு உதவும்.
மந்திரம்
“ஓம் மகீ சுதனே போற்றி”
இதையும் படிக்கலாமே: தூக்கம் வர ஆன்மீக டிப்ஸ்
கடனால் பாதிக்கப்பட்டு விரைவில் கடனில் இருந்து வெளியே வருவதற்கு மைத்ரேய முகூர்த்தத்தை முழுமையாக இந்த முறையில் பயன்படுத்தி செவ்வாய் பகவானின் அருளையும் சனீஸ்வர பகவானின் அருளையும் பெற்று சிறப்பான வாழ்க்கையை வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.