உக்கிர தெய்வங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமாக திகழக்கூடியவள் வாராகி அம்மன் என்றும் வாராகி அம்மனுக்குரிய வழிபாட்டை முறையாக செய்பவர்களுக்கு அவளின் அருளால் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்குரிய நவராத்திரியாக தான் ஆஷாட நவராத்திரி திகழ்கிறது. இந்த ஒன்பது நாட்களும் வாராகி அம்மனை முழுமனதோடு வழிபாடு செய்ய பலவிதமான நன்மைகள் உண்டாகும். அதிலும் குறிப்பாக கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதற்கு எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஆஷாட நவராத்திரி தீபம்
எந்த ஒரு பூஜையை செய்வதாக இருந்தாலும், வழிபாட்டை செய்வதாக இருந்தாலும் முதலில் நாம் செய்யக்கூடிய காரியம் தீபம் ஏற்றுவது தான். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமாக தீபமேற்றி வழிபாடு செய்யும் வழக்கம் என்பது இருக்கும். எத்தனை எண்ணிக்கையில் தீபம் ஏற்றுவது, எதைப் பயன்படுத்தி தீபம் ஏற்றுவது, எந்த திசையை பார்த்து தீபம் ஏற்றுவது என்று பல விதங்களில் மாறுபடும். அந்த வகையில் வாராகி அம்மனின் அருளை பெறுவதற்கு ஆஷாட நவராத்திரியில் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
ஆஷாட நவராத்திரி என்பது ஜூன் மாதம் 26 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ஆரம்பித்து ஜூலை மாதம் 4 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த ஒன்பது நாட்களும் வீட்டில் வாராகி அம்மனின் சிலை இருக்கும் பட்சத்தில் அந்த சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம். தினமும் அபிஷேகம் செய்ய இயலாதவர்கள் முதல் நாள், பஞ்சமி திதி, அஷ்டமி திதி, நிறைவு நாள் போன்ற நாட்களில் அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம். தினமும் வாராகி அம்மனுக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் எப்பொழுதும் போல் ஒன்பது நாட்களும் தங்களுடைய உடல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விரதம் இருந்து கொள்ளலாம். இதோடு சேர்த்து நாம் வாராகி அம்மனுக்காக ஏற்றக்கூடிய ஒரு தீபம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களை போக்கும்.
இதற்கு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். ஐந்து செம்பருத்தி இலைகளை பறித்து சுத்தம் செய்து அதை தாம்பாள தட்டில் வட்ட வடிவில் வைத்து அதன் நுனி பகுதியில் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த ஐந்து செம்பருத்தி இலைக்கும் நடுவில் ஒரே ஒரு தீபத்தை வைத்து அதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபமேற்றி வைக்க வேண்டும். அதேபோல் வாராகி அம்மனுக்கும், நாம் ஏற்றக்கூடிய அந்த தீபத்திற்கும் செம்பருத்தி மலரை சாற்றி வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய கஷ்டங்கள் அனைத்துமே நீங்கும்.
தினமும் வழிபாடு செய்யும்பொழுது பழைய இலைகளை மாற்றி விட்டு புதிய இலைகளை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். தினமும் ஐந்து எண்ணிக்கையில் இலைகள் கிடைக்காது என்பவர்கள் ஒரு இலையை வைத்து அதன் மேல் தீபம் ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தீபம் ஏற்றி முடித்துவிட்டு வாராகி அம்மனின் மூல மந்திரத்தை 27 முறையோ அல்லது 108 முறையோ கூறி மஞ்சள் அல்லது குங்குமத்தால் அர்ச்சனை செய்வதன் மூலம் நம்முடைய கஷ்டங்கள் அனைத்துமே நீங்கும்.
இதையும் படிக்கலாமே: வாழ்க்கையை மாற்றும் ஆஷாட நவராத்திரி நெய்வேத்யம்
வாராகி அம்மனை நினைத்து கலசம் வைத்து விரதம் இருந்து ஆஷாட நவராத்திரியில் வழிபாடு செய்ய இயலாதவர்கள் கூட இந்த எளிமையான தீபத்தை ஏற்றி வழிபாடு செய்ய வாராகி அம்மனின் அருளை பரிபூரணமாக பெற்று கஷ்டங்கள் அற்ற நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.