முடி கொட்டும் பிரச்சினை இருப்பவர்கள், முடி வளர்ச்சி குறைந்தவர்கள், அரிப்பு, பொடுகு தொல்லை உள்ளவர்களும் கெமிக்கல் ஷாம்புக்களை அடியோடு தவிர்த்து விட்டு, இரசாயனங்கள் இல்லாத ஷாம்பூவை வீட்டிலேயே தயாரிப்பது உங்கள் முடிக்கு மிகவும் நல்லது. வீட்டிலேயே இயற்கையான முறையில் எளிமையாக ஷாம்பு தயாரிப்பது எப்படி? என்று இந்த அழகு குறிப்பு பதிவில் பார்ப்போம்.
இயற்கை ஷாம்பு செய்ய தேவையான பொருட்கள்:
ரீத்தா (அரைத்த தூள் அல்லது முழு காய்கள்) – 1/2 கப்
சிகைக்காய் (அரைத்த தூள் அல்லது முழு காய்கள்) – 1/2 கப்
நெல்லிக்காய் (அரைத்த தூள் அல்லது முழு காய்கள்) – 1/4 கப்
கற்றாழை ஜெல் – 2-3 தேக்கரண்டி
தண்ணீர் – 4-5 கப்
எசன்ஷியல் ஆயில் (லாவெண்டர், ரோஸ்மேரி, தேயிலை மர எண்ணெய் போன்றவை) – 10-15 துளிகள் (விரும்பினால்)
இயற்கை ஷாம்பு செய்முறை விளக்கம்:
முதலில் ரீத்தா, சிகைக்காய், நெல்லிக்காய் ஊற வைத்தல் அவசியமாகும். ஒரு பெரிய பாத்திரத்தில் ரீத்தா, சிகைக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். முழு காய்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அவற்றை உடைத்து சேர்க்கவும். அதில் 4-5 கப் தண்ணீரைச் சேர்த்து இரவு முழுவதும் ஊறவிடவும். இது அவற்றின் சத்துக்களை நீரில் இறக்க உதவும். மறுநாள் காலை, ஊற வைத்த கலவையை அதே பாத்திரத்தில் அடுப்பில் வைத்து மிதமான தீயில் 15-20 நிமிடங்கள் கொதிக்க விடவும். ரீத்தா, சிகைக்காய் மென்மையாகும் வரை கொதிக்க விடவும். பின் அடுப்பை அணைத்து, கலவையை நன்கு ஆற விடவும்.
ஆறியதும், ஒரு மெல்லிய துணி அல்லது வடிகட்டி மூலம் திரவத்தை நன்கு பிழிந்து வடிகட்டவும். இது ஷாம்பூவின் அடிப்படையாகும். மற்ற திடக்கழிவுகளை நீக்கி விடவும். வடிகட்டிய திரவத்துடன் கற்றாழை ஜெல்லைச் சேர்த்து நன்கு கலக்கவும். கற்றாழை முடியை மென்மையாக்கவும், ஈரப்பதமாக்கவும் உதவும். நீங்கள் உங்கள் விருப்பத்திற்கேற்ப எசன்ஷியல் ஆயில் துளிகளைச் சேர்த்து நன்கு கலக்கவும். இது ஷாம்பூவிற்கு ஒரு நல்ல நறுமணத்தையும், கூடுதல் நன்மைகளையும் சேர்க்கும். உதாரணத்திற்கு ரோஸ்மேரி எசன்ஷியல் ஆயில் முடி வளர்ச்சிக்கு உதவும். இந்த ஷாம்பூவை ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் சேமிக்கவும். இதை சுமார் ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
இயற்கை ஷாம்பு பயன்படுத்தும் முறை:
உங்கள் தலைமுடியை நன்கு ஈரப்படுத்தவும். சிறிதளவு ஷாம்பூவை எடுத்து தலையில் தேய்த்து நுரை வரும் வரை மசாஜ் செய்யவும். நன்கு தண்ணீர் விட்டு அலசவும். இந்த ஷாம்பூ இரசாயன ஷாம்பூக்களைப் போல அதிக நுரை வராது, ஆனால் நன்றாக சுத்தம் செய்யும். உங்கள் முடி வகைக்கேற்ப ரீத்தா, சிகைக்காய், நெல்லிக்காய் விகிதங்களை மாற்றியமைக்கலாம்.
இதையும் படிக்கலாமே:
சுடலை மாடசுவாமி வழிபாடு
உங்களுடைய கூந்தல் வறண்டதாக இருந்தால், வறண்ட கூந்தலுக்கு, கற்றாழை ஜெல் அளவை அதிகரிக்கலாம். எண்ணெய் பசை உள்ள கூந்தலுக்கு, கூடுதலாக இவற்றுடன் எலுமிச்சை சாறு சில துளிகள் சேர்க்கலாம். மேற்கூறிய பொருட்களை பிரஷ் ஆக புத்தம் புதியதாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். பழைய பொருட்களைபயன்படுத்த வேண்டாம். இந்த முறையில் நீங்கள் தலையை சுத்தம் செய்து வந்தால் சீக்கிரமே உங்களுடைய தலைமுடி சார்ந்த அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும். இனி கெமிக்கலுக்கு குட்பை சொல்லிவிட்டு இயற்கை ஷாம்புக்கு நீங்களும் மாறலாம் தானே?