நாளைய தினம் ஆனி மாதத்தில் வரும் குருவார பௌர்ணமி. வியாழக்கிழமையோடு இந்த பௌர்ணமி திதி வந்திருப்பது அதி சிறப்பு. இந்த நாளில் பூராடம் நட்சத்திரமும் இருக்கிறது. இந்த பௌர்ணமி திதி அன்று குலதெய்வ வழிபாடு செய்வது, ஊர் மாரியம்மன் கோவில் அல்லது வேறு ஏதாவது அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது, குடும்பத்திற்கு சுபிட்சத்தை தரும். குடும்பத்தில் இருக்கும் சுப காரிய தடைகளை விளக்கும்.
அம்மனுடைய அருள் ஆசையை முழுமையாக பெற்று தரும். அதேபோல் இந்த பௌர்ணமி நாளில் குலதெய்வ வழிபாடும் செய்யலாம் மிகவும் நல்லது. நாளைய தினம் செய்ய வேண்டிய இரண்டு அற்புதமான வழிபாடுகளை பற்றி தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஒன்று அம்மன் வழிபாடு, இன்னொன்று சிவன் வழிபாடு.
அம்மன் வழிபாடு
வீட்டின் அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு நாளை மாலை நேரத்தில் செல்ல வேண்டும். எந்த அம்மன் கோவிலாக இருந்தாலும் சரி, அந்த அம்மனுக்கு வாசம் நிறைந்த மல்லிகைப்பூ வாங்கி கொடுக்கலாம். இல்லையென்றால் செவ்வரளி புஷ்பங்களை வாங்கி கொடுத்து, தேங்காய் உடைத்து உங்கள் குடும்பத்தின் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.
முடிந்தால் மஞ்சள் குங்குமம் அந்த அம்மன் கோவிலுக்கு வாங்கி தானமாக கொடுக்கலாம். இதெல்லாம் வழக்கமாக நாம் செய்யும் வழிபாடுதான். நாளை வியாழக்கிழமை சேர்ந்து வந்திருக்கும் பௌர்ணமி நாளில் பூராடம் நட்சத்திரம் சேர்ந்திருப்பதால், அம்மனுக்கு மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வது அதி அற்புதமான பலனை கொடுக்கும்.
உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு மனதாரப் பிரார்த்தனை செய்து கொண்டு, உங்களுடைய கோரிக்கையை அம்பாளிடம் வைத்து இந்த மாவிளக்கு ஏற்றி மனமுருகி அம்பாளை வழிபட உங்களுடைய வேண்டுதல் அடுத்த பௌர்ணமி திதி வருவதற்குள் பலிக்கும் என்பதுதான் நம்பிக்கை.
இந்த அதிசக்தி வாய்ந்த நாளை யாரும் தவற விடாதீங்க. கோவிலுக்கு போய் மாவிளக்கு போடக்கூடிய சூழ்நிலை அமையவில்லை என்றாலும் கவலை வேண்டாம். வீட்டிலேயே அந்த அம்மனை நினைத்து பூஜை அறையிலும் நாளைய தினம் இந்த மாவிளக்கை போடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பௌர்ணமி சிவன் வழிபாடு
அடுத்து, பௌர்ணமி என்றாலே நாம் நினைவுக்கு வருவது அண்ணாமலையார் கிரிவலம். வாய்ப்பு உள்ளவர்கள் நாளைய தினம் கிரிவலம் செல்லலாம். நாளைய தினம் திருவண்ணாமலைக்கு செல்லக்கூடிய பாக்கியம் கிடைத்தாலே அது பெரும் அற்புதம்.
அதுவும் அந்த கோவிலுக்கு கிரிவலத்திற்கு வரக்கூடிய பக்தர்களுக்கு உங்கள் கையால் நீர்மோர் தானம் கொடுத்தால் உங்களுடைய பல ஜென்ம பாவங்கள் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை எல்லாம் எங்களால் செல்ல முடியாது. இதற்கு வாய்ப்பில்லை என்றால் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு சிவன் கோவிலில் பௌர்ணமி நாளில் நீர்மோர் தானம் கொடுக்கலாம்.
இதையும் படிக்கலாமே: ஆனி பௌர்ணமி குலதெய்வ வழிபாடு
நாளைய தினம் வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் இந்த பௌர்ணமி நாளில் சிவன் கோவிலில் நின்று நீர் மோர் தானம் கொடுத்தால் புண்ணியம் சேரும் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.