நம்முடைய முன்னோர்கள் காலத்தில் உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கூறுவார்கள். இன்றைய காலத்தில் அது இரு பாலருக்கும் பொதுவான ஒன்றாகவே திகழ்கிறது. ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அவர்கள் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைத்து அந்த வேலையில் தங்களின் திறமையை காட்டி முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்டு பலரும் செயல்பட்டு வருகிறார்கள். அப்படி செயல்படக்கூடிய ஒவ்வொரு நபரும் தங்களுடைய குறிக்கோளை அடைந்து விட்டார்களா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் இல்லை என்று தான் கூற வேண்டும். ஒரு சிலருக்கு மட்டுமே தங்களுடைய படிப்பிற்கேற்ற வேலையோ அல்லது திறமைக்கேற்ற வேலையோ கிடைக்கும். அதிலும் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வேலையில் படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். பலருக்கும் இதில் ஏதாவது ஒரு தடை வந்து கொண்டு தான் இருக்கும். அந்த தடைகளை நீக்கக்கூடிய ஒரு சூரிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
திறமைக்கேற்ற வேலை கிடைக்க வழிபாடு
எவ்வளவு பெரிய சூழ்நிலையாக இருந்தாலும் தன்னுடைய வேலையை நிறுத்தாமல் செய்து கொண்டே இருக்கக்கூடிய ஒரே ஒருவர் என்றால் அவர் சூரிய பகவான் தான். எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய வேலையை நிறுத்தவே இல்லை. அப்படி அவர் நிறுத்திவிட்டார் என்றால் நம்மால் உயிர் வாழவே முடியாது என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த கிரகமாக திகழக் கூடியவர் தான் சூரிய பகவான். அதனால் தான் வேலை தொடர்பான அனைத்து வேண்டுதலுக்கும் சூரிய பகவான் காரணமாக திகழ்கிறார். யார் ஒருவருக்கு வேலை தொடர்பான பிரச்சனைகள் இருக்கிறதோ அவர்கள் சூரிய பகவானை தொடர்ச்சியாக வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு இரண்டே இரண்டு பொருட்கள் தேவைப்படும். ஒன்று செம்பால் ஆன ஒரு சொம்பு. அது சிறிய அளவில் இருந்தாலும் சரி பெரிய அளவில் இருந்தாலும் சரி அது தங்களின் விருப்பம். மற்றொன்று பனங்கற்கண்டு. பனங்கற்கண்டை பொடி செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். எப்பொழுது சூரியன் உதயம் ஆகிறது அதிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் இந்த வழிபாட்டை நாம் செய்து விட வேண்டும்.
சூரிய உதயம் ஆவதற்கு முன்பாகவே குளித்து தயாராக இருங்கள். சூரிய உதயம் ஆன பிறகு நாம் வாங்கி வைத்திருக்கும் சொம்பு நிறைய தண்ணீரைப் பிடித்து அதில் சிறிதளவு மட்டும் பொடி செய்து வைத்திருக்கும் பனங்கற்கண்டு போட்டு விடுங்கள். சூரியன் கிழக்கு திசையில் உதித்திருப்பார் அல்லவா? அவரை பார்த்து இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இரண்டு கைகளிலும் அந்த சொம்பை வைத்துக் கொண்டு சூரிய பகவானின் பின்வரும் மந்திரத்தை கூறி சிறிதளவு தண்ணீரை கீழே ஊற்ற வேண்டும். இப்படி தொடர்ச்சியாக ஏழு முறையோ 21 முறையோ அந்த மந்திரத்தை கூறி தண்ணீரை ஊற்ற வேண்டும். இதே போல் தினமும் தொடர்ச்சியாக நாம் சூரிய பகவானை வழிபாடு செய்தோம் என்றால் சூரிய பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கப்பெற்று வேலை தொடர்பான அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்.
மந்திரம்
“ஓம் ஹ்ரீம் சூர்யாய நமஹ”
இதையும் படிக்கலாமே: ஆடி மாதம் குலதெய்வம் வீட்டிற்கு வர
மிகவும் எளிமையான இந்த சூரிய வழிபாட்டை முழுமனதோடு யார் ஒருவர் தொடர்ச்சியாக செய்கிறார்களோ அவர்களுக்கு வேலை தொடர்பான அனைத்து வேண்டுதல்களும் முன்னேற்றமும் உண்டாகும். மேலும் அரசு தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.