நாம் ஒவ்வொருவருக்கும் தாய் தந்தை எப்படி இருக்கிறார்களோ அதே போல் தான் குலதெய்வமும் இருக்கிறது. தாய், தந்தை நம்மை காப்பாற்ற கூடியவர்கள் என்றால் குலதெய்வம் நம் குலத்தையே காப்பாற்ற கூடியவர்களாக திகழ்கிறார்கள். அப்படிப்பட்ட குல தெய்வத்தை முழுமனதோடு நினைத்து நாம் அனுதினமும் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி குலதெய்வத்தை நாம் வழிபாடு செய்தால் தான் நம் வாழ்க்கையில் நமக்கு நடக்கக்கூடிய அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும். மேலும் எப்பேற்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் அதிலிருந்து நம்மை காப்பாற்றவும் செய்யும். அப்படிப்பட்ட குல தெய்வத்தை ஆடி முதல் நாள் வீட்டிற்கு அழைக்கும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
குலதெய்வம் வீட்டிற்கு வர வழிபாடு
என்றென்றும் குலதெய்வம் நம்முடைய வீட்டில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது நியாயம்தான். இருந்தாலும் நம்மை போல எத்தனையோ பேர் குலதெய்வம் தங்களுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் அல்லவா? அதனால் நாம் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு குல தெய்வத்தை அழைக்கும் வழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் குலதெய்வத்தின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்க நாள் அன்று குலதெய்வத்தை நாம் வீட்டிற்கு அழைத்தோம் என்றால் அந்த மாதம் நமக்கு சிறப்பான மாதமாக அமையும்.
ஆடி மாதம் முதல் நாள் ஜூலை மாதம் 17ஆம் தேதி காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர், பச்சை கற்பூரம், மஞ்சள் தூள், கல் உப்பு போன்றவற்றை கலந்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மூலையிலும் தெளிக்க வேண்டும். அதேபோல் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் விலகுவதற்காக பேப்பர் கப்பில் கல் உப்பை நிரப்பி வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் வைக்க வேண்டும்.
அடுத்ததாக வீட்டு பூஜை அறையில் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு முன்பாக ஒரு வாழை இலையை விரித்து அதில் பச்சரிசியை பரப்பி அதற்குமேல் ஒரு கலசத்தை வைத்து அந்த கலசத்திற்குள் நம்முடைய வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அத்தனை எண்ணிக்கையில் எலுமிச்சம் பழத்தை போட வேண்டும். பிறகு அதில் பன்னீர் ஊற்றி, சிறிது மஞ்சள் தூள், கல் உப்பு, துளசி இலை போன்றவற்றை போட்டு அதற்கு மேல் மா இலை, வேப்பிலையை வைத்து அதற்கு மேல் மஞ்சள் தேய்த்த தேங்காயை வைக்க வேண்டும். இந்த கலசத்தையே நாம் குலதெய்வமாக பாவிக்க வேண்டும்.
நம்முடைய வீட்டில் ஏதேனும் ஆபரணங்கள் இருக்கும் பட்சத்தில் அந்த ஆபரணங்களை கலசத்திற்கு அணிவித்து வாசனை மிகுந்த மலர்களால் குலதெய்வத்திற்குரிய மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். குலதெய்வத்திற்கு நெய்வேத்தியமாக கருப்பு கொண்டை கடலை சுண்டல் மற்றும் ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைக்க வேண்டும். பிறகு “ஓம் ஸ்ரீம் க்லீம் குலதெய்வமே நம” என்னும் மந்திரத்தை 27 முறை கூறி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். கடைசியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.
அன்று முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். மறுநாள் பிடித்து வைத்திருந்த பிள்ளையாரை எடுத்து நம்முடைய நிலை வாசலில் நன்றாக வட்டமாக பூசி அதற்கு நடுவே குங்குமத்தை வைத்து விட வேண்டும். கலசத்தில் இருக்கக்கூடிய தேங்காயை பச்சை நிற துணியில் மூட்டையாக கட்டி வாசலில் கட்டி விட வேண்டும். கலசத்திற்குள் போட்ட எலுமிச்சம் பழத்தை அனைவரும் இரவு தங்களுடைய தலையணைக்கு கீழ் வைத்து படுக்க வேண்டும். மூன்று நாட்கள் இவ்வாறு செய்த பிறகு நான்காவது நாள் ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். கலசத்தில் இருக்கக்கூடிய தீர்த்தத்தை வீட்டில் அனைத்து இடங்களிலும் தெளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் குலதெய்வம் நம் வீட்டிற்கு பாதுகாப்பு கவசமாக இருப்பதோடு நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.
இதையும் படிக்கலாமே:வசம்பு தீபம் ஏற்றும் முறை
இந்த முறையில் குலதெய்வத்தை நாம் ஆடி முதல் நாள் வழிபாடு செய்யும் பொழுது குலதெய்வம் நம் வீட்டிற்கு வந்து பாதுகாப்பு கவசம் ஆக இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.