நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் எந்தவித கஷ்டத்தையும் அனுபவிக்காமல் சுகமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றுதான் நினைப்போம். ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமான ஒரு செயல் கிடையாது. அதனால் பலரும் நாம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை நம்முடைய பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது அவர்கள் சுகமாக வாழ வேண்டும் என்று கஷ்டப்பட்டு உழைத்து பிள்ளைகளுக்காக சேர்த்து வைப்பார்கள். இப்படி சேர்த்து வைத்தாலும் ஒரு சிலரால் சுகமான வாழ்க்கையை வாழ முடியாத ஒரு நிலை உண்டாகும். இதற்கு முக்கியமான காரணமாக திகழ்வது சுக்கிர தோஷம் தான். சுக்கிர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடி வெள்ளிக்கிழமை எந்த முறையில் தீபம் ஏற்றினால் அந்த தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சுகமான வாழ்க்கை வாழ வழிபாடு
சுகபோகமான வாழ்க்கையை அருளக்கூடியவராக தான் சுக்கிர பகவான் திகழ்கிறார். இவரின் அதி தேவதையாக மகாலட்சுமி தாயார் திகழ்கிறார். இவர்களுக்கு உகந்த கிழமையாக வெள்ளிக்கிழமை திகழ்கிறது. வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாரை யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு சுக்கிரதோஷம் என்பது முற்றிலும் நீங்குவதோடு சுக்கிர பகவானின் அருளையும் பெற முடியும். இப்படி வழிபாடு செய்வதோடு இந்த ஒரு சிறப்பான ஒரு தீபத்தை நாம் ஏற்று வைத்தோம் என்றால் வீட்டில் யாருக்கு சுக்ர தோஷம் இருந்தாலும் அவை முற்றிலும் நீங்கும்.
குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்களில் யாராவது ஒருவருக்கு சுக்கிரதோஷம் ஏற்பட்டிருந்தாலும் அதனால் அந்த குடும்பமே பாதிப்படையும் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. சுகமான வாழ்க்கையை குடும்பத்தில் இருக்கக்கூடிய நபரால் வாழ முடியவில்லை என்றால் அந்த குடும்பத்தாலும் வாழ முடியாது என்பதுதான் ஐதீகம். அதனால் சிறப்பான நல்லதொரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுக்கிர பகவானை வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் ஆடி வெள்ளிக்கிழமையில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு அளவில்லா பலன் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை வரக்கூடிய சுக்கிர ஹோரை என்பது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் வரும். இந்த மூன்று நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். முடிந்த அளவிற்கு இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் வரக்கூடிய சுக்கிர கோரையை பயன்படுத்துவது சிறப்பு. இந்த சுக்கிர ஹோரயான ஒரு மணி நேரமும் நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய தாம்பாள தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளை மொச்சை முழுமையாக பரப்பிக் கொள்ளுங்கள். வெள்ளை மொச்சை என்பது சுக்கிரனுக்குரிய தானியமாக கருதப்படுகிறது. அதற்குமேல் ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். சுத்தமான செக்கில் ஆட்டிய நல்லெண்ணையை அதில் ஊற்ற வேண்டும். பிறகு அதில் தாமரை தண்டு திரியை போட்டுக் கொள்ளுங்கள். அடுத்ததாக இந்த எண்ணையில் மூன்று கிராம்பு, ஒரு சிறிய துண்டு பட்டை சேர்த்து சிறிதளவு பச்சைக் கற்பூரத்தையும் நுணுக்கி அதில் போட்டு பிறகு தீபம் ஏற்ற வேண்டும். சரியாக சுக்கிர ஹோரை ஆரம்பிக்கும் பொழுது இந்த தீபத்தை ஏற்றுங்கள்.
சுக்கிரஹோரை முழுவதும் அதாவது ஒரு மணி நேரம் முழுவதும் இந்த தீபம் எரிய வேண்டும். பிறகு இந்த தீபத்தை குளிர வைத்துக்கொள்ளலாம். இப்படி நாம் தீபம் ஏற்றிய பிறகு மகாலட்சுமி தாயாரின் மந்திரத்தையோ அல்லது சுக்கிர பகவானின் மந்திரத்தையோ கூறி வழிபாடு செய்து சுக்ரதோஷம் முற்றிலும் நீங்க வேண்டும் என்ற வேண்டுதலை முன் வைத்தோம் என்றால் மகாலட்சுமி மற்றும் சுக்கிர பகவானின் அருளால் தோஷங்கள் அனைத்தும் நீங்கி சுகமான வாழ்க்கையை வாழ முடியும். மறுநாள் காலையில் தட்டில் இருக்கக்கூடிய மொச்சையை காக்கை குருவிகளுக்கு தானமாக தர வேண்டும்.
இதையும் படிக்கலாமே: ஆடி இரண்டாம் வெள்ளி வழிபாடு
சுக்கிர தோஷத்தை நீக்கக்கூடிய இந்த தீபத்தை முழுமனதோடு மகாலட்சுமி தாயாரை நினைத்துக் கொண்டு யார் ஒருவர் ஆடி வெள்ளிக்கிழமை ஏற்றி வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு சுக்கிரனின் பரிபூரண அருள் கிடைப்பதோடு தோஷமும் முற்றிலும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.