இந்து சாஸ்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி திதியில், விநாயகர் சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி நாளை ஞானத்தையும், நல்லறிவையும் வழங்கும் விநாயகப் பெருமானை, நாம் கொண்டாடும் ஒரு அற்புதமான திருவிழாவாக பார்க்கிறோம். இந்த நாளில், நாம் எவ்வாறு பாரம்பரிய முறைப்படி விநாயகரை வழிபடுவது? பூஜை செய்ய உகந்த நேரம் என்ன? என்பது போன்ற ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ளப் போகிறோம்.
விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த சரியான நல்ல நேரம் :
ஆகஸ்ட் 27, 2025 அன்று காலை 11:06 மணி முதல் பிற்பகல் 1:40 மணி வரை.
விநாயகர் சதுர்த்தி அன்று நாம் செய்ய வேண்டியவை:
முதலில், விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளே வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். வீட்டை சுத்தம் செய்வது மனதையும், உடலையும் தூய்மைப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. சதுர்த்தி அன்று, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்குவது நல்லது. களிமண் சிலை சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்காதது. வீட்டில் பூஜை செய்யும் இடத்தில், ஒரு சிறிய மேடை அல்லது பலகையை வைத்து, அதன் மேல் வாழை இலை பரப்ப வேண்டும். வாழை இலையின் மேல் அரிசி மாவால் கோலம் போட்டு, அதன் மேல் விநாயகர் சிலையை வைக்க வேண்டும்.
விநாயகருக்கு பிடித்தமான அருகம்புல் மாலை, தும்பை பூ, செம்பருத்தி பூ, எருக்கம் பூ மற்றும் பிற பூக்களால் சிலையை அலங்கரிக்க வேண்டும். விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், சுண்டல், அவல் மற்றும் பழங்களை நைவேத்தியமாக படைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகர் அகவல், விநாயகர் மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள், விநாயகர் துதி மற்றும் கணபதி ஹோமம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பிள்ளையாரை வீட்டிற்கு கொண்டு வந்த நாள் முதல் மீண்டும் நீரில் கரையும் வரை மனதிலும், வீட்டிலும் பக்தியுடன் இருக்க வேண்டும். அசைவம் சமைப்பது, அசுப வார்த்தைகளை பேசுவது, அமங்கலமான செயல்களை செய்வது போன்றவற்றை செய்யக்கூடாது. சுத்த சைவத்துடன் விரதம் இருந்து, விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை வழிபட்டால் நாம் வேண்டியது அனைத்தும் வேண்டியபடி கிடைக்கும் என்பது ஐதீகம். விநாயகர் அருள் இருந்தால் எப்பேர்பட்ட தடைகளையும் நாம் சுலபமாக தகர்த்து எறிந்து வெற்றி படியை எட்டி விடலாம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:
2025 விநாயகர் சதுர்த்தி தகவல்கள்
விநாயகர் சிலையின் முன் தீபம் ஏற்றி, கற்பூரம் காண்பிக்க வேண்டும். பின்பு, தூபம் மற்றும் ஊதுபத்தி ஏற்றி, விநாயகர் துதிகளை சொல்ல வேண்டும். விநாயகருக்கு பிரார்த்தனை செய்து, நம் வாழ்வில் நல்லறிவு, ஞானம் மற்றும் வெற்றியை அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் அருளைப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பு. இந்த நாளில், நாம் அனைவரும் விநாயகரை வழிபட்டு, நம் வாழ்வில் செழிப்பு, நல்லறிவு, ஞானம் மற்றும் வெற்றியை அருள வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தித்து வேண்டிக் கொள்வோம். வாசகர் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!