எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் காலபைரவர் என்றும் காலத்திற்கே கடவுளாக திகழக்கூடியவர் என்றும் நம் அனைவருக்கும் தெரியும் அப்படிப்பட்ட காலபைரவரை நாம் சரணாகதி அடைந்து வழிபாடு செய்து விட்டோம் என்றால் காலபைரவரின் அருளால் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்கள் உண்டாகும். முதலில் நமக்கு கஷ்டங்களை தரக்கூடிய எதிரிகளும் துரோகிகளும் நம்மை விட்டு விலகுவார்கள், எந்தவித முன்னேற்றமும் இல்லை முன்னேற்றத்தில் தடைகள் வந்து கொண்டே இருக்கிறது என்பவர்களுக்கு அந்த தடைகள் நீக்கி முன்னேற்றம் உண்டாக்கும். வீட்டில் மன குழப்பம் இருக்கிறது சண்டைகள் வந்து கொண்டே இருக்கிறது என்னும் பட்சத்தில் அவை அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். இவ்வளவு சிறப்பான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு கால பைரவரின் அருள் இருந்தால் போதும். அப்படிப்பட்ட கால பைரவரின் அருளைப் பெற வளர்பிறை அஷ்டமி நாளில் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வளர்பிறை அஷ்டமி வழிபாடு
கால பைரவருக்கு உகந்த திதியாக அஷ்டமி திதி திகழ்கிறது. அதேபோல் காலபைரவ வழிபாட்டிற்கு உகந்த கிழமையாக ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய ராகு காலம் திகழ்கிறது. இந்த முறை வளர்பிறை அஷ்டமியும் ஞாயிற்றுக்கிழமையும் ஒருசேர வருவது கூடுதல் சிறப்பை தரும். அன்றைய தினத்தில் நாம் கால பைரவரை எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வழிபாடு செய்யலாம். இது வளர்பிறை அஷ்டமி என்பதால் காலபைரவரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் அஷ்டலட்சுமிகளின் அருளையும் நம்மால் பெற முடியும் என்பது கூடுதல் சிறப்பு. அஷ்டலட்சுமிகளின் அருளை பெற்றுவிட்டால் செல்வ செழிப்புடன் வாழ முடியும் அல்லவா? நிம்மதியும் செல்வ செழிப்பும் யார் ஒருவருக்கு கிடைக்கிறதோ அவரே பாக்கியசாலியாக கருதப்படுகிறார். அந்த பாக்கியத்தை பெரும் முறையை இப்பொழுது பார்ப்போம்.
ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு வரை அஷ்டமி திதி என்பது இருக்கிறது. ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய நேரத்தில் இந்த வழிபாட்டை செய்யலாம். மூன்று அகல் விளக்குகளை புதிதாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான நெய்யை ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு இந்த மூன்று தீபத்திலும் ஒன்பது எண்ணிக்கையில் மிளகை போட வேண்டும். இந்த தீபங்கள் கிழக்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த தீபங்களுக்கு முன்பாக ஏதாவது இனிப்பு பொருட்கள், பால் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொண்டு “ஓம் கால பைரவாய போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை 27 முறை நிறுத்தி நிதானத்துடன் முழுமனதோடு கூற வேண்டும். இந்த தீபம் குறைந்தது அரை மணி நேரமாவது எரிய வேண்டும். பிறகு தீபத்தை குளிர வைத்துவிட்டு நெய்வேத்தியமாக வைத்த பொருட்களை வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் பிரசாதமாக உண்ண வேண்டும். இந்த முறையில் வீட்டிலேயே கால பைரவரை வளர்பிறை அஷ்டமி திதியில் வழிபாடு செய்பவர்களுக்கு வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நம் வாழ்க்கையில் நமக்கு எதிரிகளாக இருக்கக்கூடியவர்களும் நம்மை விட்டு விலகுவதோடு அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே: சிறப்பான வாழ்க்கை அமைய ஏற்ற வேண்டிய தீபங்கள்.
காலபைரவர் வழிபாடு என்பது மிகவும் சிறப்பான ஒரு வழிபாடு. இந்த வழிபாட்டை யார் ஒருவர் தொடர்ச்சியாக மேற்கொள்கிறார்களோ அவர்களுக்கு நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்குவதோடு மகாலட்சுமியின் அருளையும் பெற முடியும். முழு மனதோடு இந்த வழிபாட்டை செய்து நல்ல பலனை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.