வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கு உகந்த நாள். இந்த நாளில் நாம் செய்யும் சிறிய செயல்கள் கூட, நம் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். வீட்டில் செல்வம், நிம்மதி, மற்றும் சுபிட்சம் பெருக வேண்டும் என்பது நம் அனைவரின் ஆசை. குறிப்பாக வீட்டில் இருக்கக் கூடிய தரித்திரங்கள், தீய சக்திகள், கெட்ட எண்ணங்கள், எதிர்மறை ஆற்றல்கள், திருஷ்டிகள் ஆகியவை நீங்க வேண்டும். அதற்கு உதவும் ஒரு எளிய, ஆனால் மிகவும் சக்திவாய்ந்த பரிகாரத்தைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த பரிகாரம், மகாலட்சுமியின் அம்சமான குங்குமப்பூ, விஷ்ணுவின் அம்சம் கொண்ட துளசி, மற்றும் தெய்விக சக்தி வாய்ந்த பால் ஆகியவற்றை இணைத்துச் செய்யப்படுகிறது.
பரிகாரத்திற்கான பொருட்கள்:
ஒரு சிறிய சுத்தமான டம்ளர்
சிறிதளவு குங்குமப்பூ
சுத்தமான பசும்பால்
ஒரு துளசி இலை
ஒரு தீபம்
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் செய்வது சிறந்தது. முதலில், ஒரு எச்சில் படாத அதாவது பூஜைக்கு பயன்படுத்தக் கூடிய வெள்ளி அல்லது பித்தளை, செம்பு, மண் குவளை எதுவாக இருந்தாலும் சரிதான், சிறிய டம்ளரில் சிறிது பால் எடுத்து, அதில் ஒரு சிட்டிகை குங்குமப்பூவை கலக்கவும். குங்குமப்பூ, செல்வம் மற்றும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டது. பணத்தை ஈர்க்கும் தெய்வீக மூலிகை பொருளாகவும் பாவிக்கப்படுகிறது.
உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையை (ஈசான்யம்) சுத்தம் செய்து, இந்த பாலை அங்கு வைக்கவும். ஈசான்ய மூலை என்பது குபேரனுக்கு உரிய திசை என்றும், ஆன்மீக சக்திகள் அதிகம் நிறைந்த பகுதி என்றும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அந்த பாலின் அருகே ஒரு துளசி இலையை விடவும். துளசி, விஷ்ணுவின் அம்சமாக கருதப்படுவதால், இது இறைசக்தியை ஈர்க்கும். அதன் அருகே ஒரு சிறிய அகல் விளக்கு அல்லது தீபத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
தீபத்தை ஏற்றிய பிறகு, அமைதியாக அமர்ந்து, “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை 27 முறை உச்சரிக்கவும். விஷ்ணுவின் அருளைப் பெறும் இந்த மந்திரம், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, நேர்மறை அதிர்வுகளை உருவாக்கும். அது அப்படியே அங்கேயே மூடி போட்டு இருக்கட்டும். பின்னர் மாலை நேரத்தில், குடும்பத்தினர் அனைவரும் அந்த குங்குமப்பூ கலந்த பாலை சிறிது சிறிதாகப் பருகலாம். இது தெய்வீக சக்திகள் நிறைந்த பிரசாதமாக கருதப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:
ரோட்டு கடை பரோட்டா சால்னா
இந்த பரிகாரத்தின் பலன்கள்:
இந்த எளிய பரிகாரம், குங்குமப்பூ, துளசி மற்றும் மந்திர ஜபம் ஆகிய மூன்றின் சக்திகளையும் ஒருசேர இணைக்கிறது. இது உங்கள் வீட்டில் செல்வம், அமைதி மற்றும் சந்தோஷத்தை உருவாக்கும். தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் இதைச் செய்து வந்தால், உங்கள் குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். மேலும், குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும், தரித்திரங்கள் நீங்கப் பெறும். இந்த நம்பிக்கை சார்ந்த பரிகாரத்தை நீங்கள் முயற்சி செய்து பார்த்து, அதன் பலன்களை உணர்ந்தால், உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நம்பிக்கைதான் நம் ஆன்மீக வாழ்வின் மிகப்பெரிய சக்தி.