இந்த பூலோகத்தில் நாம் வாழ்வதற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தந்து நம்மை காக்கக்கூடிய தெய்வமாக பெருமாள் திகழ்கிறார். அப்படிப்பட்ட பெருமாளை வழிபாடு செய்வதற்கு உகந்த மாதங்களில் ஒன்றாக திகழ்வதுதான் புரட்டாசி மாதம். அதிலும் குறிப்பாக திருப்பதி வெங்கடாசலபதியை வழிபாடு செய்வதற்கு உகந்த மாதமாக இந்த புரட்டாசி மாதம் திகழ்கிறது. அப்படிப்பட்ட புரட்டாசி மாதத்தில் பெருமாளை நினைத்து நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் நம்முடைய பணம் தொடர்பான வேண்டுதலை நிறைவேற்றும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வேண்டுதலை நிறைவேற்றும் பரிகாரம்
வரவேண்டிய பணம் வரவில்லை, வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் இல்லை, கடன் வாங்கிய இடத்தில் நெருக்கடியாக இருக்கிறது, கடனை திருப்பிச் செலுத்த வழி இல்லை, அடமானத்தில் வைத்த நகையை திருப்ப முடியவில்லை, வங்கியில் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் அவமானப்பட்டு கொண்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களும் புரட்டாசி மாதத்தை முறையாக பயன்படுத்தினால் பணக்கார கடவுளான வெங்கடாசலபதியின் அருளை பரிபூரணமாக பெற்று பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வெளியில் வர முடியும். அப்படிப்பட்ட ஒரு எளிமையான சிறப்பான பரிகாரத்தை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை புரட்டாசி மாதத்தின் முதல் நாளான செப்டம்பர் 17ஆம் தேதி புதன்கிழமை அன்று செய்ய வேண்டும். அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள், மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு புதன் பகவானுக்குரிய பொருட்கள் தேவைப்படும். ஒரு பச்சை நிற துணி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த துணியை பன்னீர் ஊற்றி சுத்தமாக கழுவி நிழலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பச்சை நிற துணியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை வைக்க வேண்டும். இதனுடன் 11, 101, 201, 501 என்று நம்முடைய வசதிக்கேற்ப ஏதாவது ஒரு காணிக்கையை வைக்க வேண்டும். அடுத்ததாக இதனுடன் பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். இவை மூன்றையும் வைத்து ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த மூட்டையை நாம் பூஜையில் வைக்க வேண்டும். இந்த மூட்டையை வைப்பதற்கு ஒரு பித்தளை தட்டு அல்லது புதிதாக வாங்கிய ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிரம்ப பச்சரிசியை பரப்ப வேண்டும். அந்த பச்சரிசிக்கு மேல் இந்த மூட்டையை வைக்க வேண்டும்.
இந்த அமைப்பு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளுக்கு முன்பாக இருக்க வேண்டும். தினமும் இந்த அமைப்பிற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றிக் கொள்ளுங்கள். கையில் துளசியிலேயை வைத்துக்கொண்டு “ஓம் நமோ நாராயணாய நமோ நமக” என்னும் மந்திரத்தை 21 முறை 54 முறை 108 முறை என்று தங்களுடைய நேரத்திற்கு ஏற்ப மந்திரத்தை கூறி கையில் இருக்கக்கூடிய துளசி இலையை இந்த மூட்டைக்கு பக்கத்தில் வைத்து விட வேண்டும்.
பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டும் பொழுது இந்த மூட்டைக்கும் சேர்த்து காட்டி பணம் தொடர்பான வேண்டுதலை பெருமாளிடம் முன்வைக்க வேண்டும். இப்படி புரட்டாசி மாதம் முழுவதும் நாம் இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது பெருமாளின் அருளால் நம்முடைய பணம் தொடர்பான வேண்டுதல் நிறைவேறும். பெண்கள் மாதவிடாய் சமயத்தில் இருக்கும் பொழுது ஆண்கள் இந்த வழிபாட்டை செய்யலாம்.
இதையும் படிக்கலாமே: இந்திர ஏகாதசி வழிபாடு
முழு மனதோடு மிகவும் எளிமையான இந்த பணம் தொடர்பான வேண்டுதலை நிறைவேற்றக்கூடிய பரிகாரத்தை செய்பவர்களுக்கு பெருமாளின் அருளால் அனைத்து நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.