புரட்டாசி மாதம் வரக்கூடிய சனிக்கிழமை நாளில் பிரதோஷமும் சேர்ந்து வருவதால் ரொம்பவே விசேஷமான தினமாக கருதப்படுகிறது. இந்த நாளில் பஞ்ச மகா பாவங்கள் அதாவது நாம் நம் சக்தியை மீறி செய்திருக்கக் கூடிய கொடூரமான ஐந்து மன்னிப்பே இல்லாத பாவங்களுக்கும் விமோசனம் கிடைக்கக்கூடிய அற்புதமான தெய்வ சக்தி மிகுந்த நாளாக சொல்லப்படுகிறது. அவ்வகையான பாவங்கள் என்னென்ன? சனி பிரதோஷத்தில் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
பஞ்சமா பாவங்கள்:
1. பிரம்மஹத்தி
ஒரு பிராமணரைக் கொலை செய்வது. பொதுவாக, இது பெரும் தவறு செய்த ஒருவரைக் கொலை செய்வது அல்லது அறியாமையாலும், ஆணவத்தாலும் ஒருவரின் ஆன்மீக வாழ்வை அழிப்பது போன்ற செயல்களையும் குறிக்கும்.
2 சுவர்ணஸ்தேயம்
தங்கத்தைத் திருடுவது. இது வெறுமனே தங்கத்தை மட்டுமல்லாமல், ஆலயத்தின் பொக்கிஷங்கள், தர்ம காரியங்களுக்கான பொருட்கள் அல்லது ஒருவருடைய அரிய மற்றும் விலைமதிப்பற்ற உடைமைகள் ஆகியவற்றைக் களவு செய்வதையும் குறிக்கும்.
3 சுராபானம்
மது அருந்துவது. இது தன்னை மறக்கச் செய்து, அறிவை மழுங்கடித்து, மேலும் பல பாவங்களைச் செய்யத் தூண்டும் ஒரு கொடிய பழக்கமாகக் கருதப்படுகிறது.
4 குரு துரோகம் / குரு நிந்தை
குருவை அவமதிப்பது, துரோகம் செய்வது, அல்லது கொலை செய்வது. குரு என்பவர் கல்வி, ஆன்மீகம், வாழ்க்கை நெறி ஆகியவற்றை அளிக்கும் உயர்ந்த நிலையில் உள்ளவர். அவருக்குத் தீங்கு இழைப்பது மிகப் பெரிய பாவமாகக் கருதப்படுகிறது.
5 இவர்களுக்குத் துணை போவது
மேலே குறிப்பிட்ட நான்கு பெரும் பாவங்களில் ஒன்றைச் செய்பவருக்குப் பக்கபலமாக இருத்தல் அல்லது அவர்களின் பாவச் செயல்களை அங்கீகரித்தல்/ஆதரித்தல். தானே நேரடியாகப் பாவம் செய்யாமல், பாவம் செய்பவர்களுக்கு உடந்தையாக இருப்பதும் அதே பாவத்தின் வினையைப் பெற்றுத் தரும்.
இதுபோன்ற மன்னிப்பே இல்லாத பாவங்களுக்கு கூட புரட்டாசியில் வரக்கூடிய சனி பிரதோஷத்தில் சிவபெருமானையும், சனி பகவானையும், பெருமாளையும் வழிபடுவதால் பாவ விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்நாளில் அதிகாலையில் நீராடி சுத்தப்படுத்தமாக சிவாலயம் சென்று சோமசூக்த பிரதட்சணம் செய்து சிவபெருமானை தரிசிக்க வேண்டும். நந்தியையும் இந்நாளில் வழிபட நீங்கள் தவறக்கூடாது. நீங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தருமாறு மனமுருகி வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு சனிபகவான் சன்னதிக்கு சென்று எள் தீபம் ஏற்றி வைத்து சிவபெருமானுடைய பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். “ஓம் நமசிவாய” என்னும் இந்த மந்திரத்தை அமைதியாக உச்சரித்து அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்க வேண்டும், நல்வாழ்வு கிட்ட வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி பரிகாரம்
சனிப்பிரதோஷத்தில் ஈசனையும், சனீஸ்வரனையும் வழிபடுபவர்களுக்கு சகல விதமான சௌபாக்கியங்களும் உண்டாகும். செல்வம், புகழ், ஆரோக்கியம் அனைத்தும் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் செய்த பாவங்களுக்கு விமோசனமும் உண்டாகும் என்பதால், இந்த நாளில் இம்மூவரையும் ஒருசேர வழிபட மறக்க வேண்டாம். மேலும் இந்நாளில் பாவங்கள் நீங்க சனீஸ்வரன் வழிபாடு முடிந்தபின், அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். எந்த அளவிற்கு அன்னதானம் செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய பலன்கள் அதிகரிக்கும். கர்மவினை பாவங்கள், கொடூரமான துன்பங்கள் அனைத்திலிருந்தும் விடுபட இந்த புரட்டாசி மாதம் வரக்கூடிய சனி பிரதோஷத்தை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.