பொதுவாகவே தீபாவளி அன்று காலையிலிருந்து பூஜை செய்யும் வரை பலவிதமான வழிமுறைகளை நாம் பின்பற்றுவோம். அதேபோல் மாலை நேரத்திலும் பலவிதமான வழிபாட்டு முறைகளை பின்பற்றுவோம். இவற்றை செய்வதோடு அன்று இரவு படுக்க செல்வதற்கு முன் ஒரு சில வழிமுறைகளை பின்பற்றுவதால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கி புது வாழ்க்கை உண்டாகும். அந்த வழிமுறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தோஷங்களை நீக்கும் பரிகாரம்
தீபாவளி அன்று காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்து பலகாரங்கள் அனைத்தும் தயார் செய்து நெய்வேத்தியமாக சுவாமிக்கு வைத்து வழிபாடு செய்து விட்டு புத்தாடிகளை அணிந்து பட்டாசுகளை வெடிப்பது பலகாரங்களை சாப்பிடுவது அக்கம் பக்கத்தில் இருக்கக்கூடியவர்களுக்கு பலகாரங்களை தருவது என்று பலவிதமான வழிமுறைகளை பின்பற்றுவோம். அதேபோல் மாலை நேரத்தில் லட்சுமி பூஜை, லட்சுமி குபேர பூஜை, லட்சுமி கடாட்சத்தை பெறுவதற்குரிய பரிகாரம் என்று பலவிதமான வழிபாடுகளையும் வழிமுறைகளையும் பின்பற்றுவோம். இதோடு தீபாவளி அன்று இரவு செய்ய வேண்டிய செய்யக்கூடாத சில விஷயங்கள் என்று இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்குவதோடு நல்ல நேரமும் பிறக்கும்.
பொதுவாக தீபாவளி அன்று அனைவரும் புத்தாடை உடுத்துவோம். ஆனால் அன்று இரவு படுக்கச் செல்வதற்கு முன் புத்தாடைகளை அணிந்து கொண்டு படுத்து உறங்காமல் புத்தாடைகளை மாற்றி விட்டு சாதாரண உடையில் தான் படுத்து உறங்க வேண்டும். அதேபோல் உறங்குவதற்கு முன்பாக ஒரு பச்சை கற்பூரத்தை எடுத்து நம்மை நாமே வலப்புறமாக எட்டு முறையும் இடப்புறமாக எட்டு முறையும் சுற்றி கற்பூரத்தை வாசலில் வைத்து எரித்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் கண்திருஷ்டியும் நீங்கும்.
இதோடு இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை குளிக்கின்ற தண்ணீரில் போட்டு கரைத்து அந்த தண்ணீரில் குளித்துவிட்டு படுத்து உறங்க வேண்டும். எப்படி தீபாவளி அன்று காலையில் எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்கிறோமோ அதே போல் இரவு படுக்க செல்வதற்கு முன் கல் உப்பை பயன்படுத்தி குளித்துவிட்டு உறங்குவதன் மூலம் நம் வாழ்க்கையில் இதுவரை இருந்த தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இந்த எளிமையான வழிமுறையை தீபாவளி அன்று இரவு யார் ஒருவர் பின்பற்றுகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் உண்டாக்கும். மேலும் அன்று இரவு அமாவாசை திகழ்வதால் நாம் உப்பு குளியல் செய்வதன் மூலம் லட்சுமி கடாட்சத்தை பெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் கோமதி சக்கர பரிகாரம்
ஒரு நாளை தொடங்குவது எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல் அந்த நாளை நிறைவு செய்வது மிகவும் முக்கியமான ஒன்றுதான். அந்த வகையில் தீபாவளியை மகிழ்ச்சியுடன் தொடங்கக்கூடிய அனைவரும் இந்த வழிமுறைகளை பின்பற்றி அந்த வருடம் முழுவதும் மகிழ்ச்சியாக வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.