வாரம் முழுவதும் ஒரே விதமான உணவுகளை உண்டுவிட்டு, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் சற்று வித்தியாசமான உணவுகளை ட்ரை செய்து பார்ப்பது பலரின் வழக்கம். இன்றைய காலகட்டத்தில் டயட் இருப்பவர்களும் கூட, வாரத்தில் ஆறு நாட்கள் டயட் உணவை உண்டு, ஏதேனும் ஒரு நாள் அவர்களின் விருப்பமான உணவு வகளை உண்கின்றனர். அவ்வாறாக வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற பாஸ்த்தா கெட்டி குழம்பினை தான் இன்று கற்றுக்கொள்ளப் போகிறோம்.

தேவையான பொருட்கள்:
பாஸ்த்தா (மேக்ரோனி) – அரை கப், தேங்காய் துருவல் – 4 ஸ்பூன், கசகசா – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, சின்ன வெங்காயம் – 5, தக்காளி – 1, பூண்டு –5, மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன், தனியாத்தூள் – இரண்டு அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், எண்ணெய் – 50 கிராம், உப்பு – ஒன்றரை ஸ்பூன், பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து, கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன்.
செய்முறை:
முதலில் வாணலியில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து அதனுடன் அரை கப் பாஸ்தா, அரை ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, 3 நிமிடங்கள் நன்றாகக் வேக விட்டு, பாஸ்த்தா வெந்தவுடன் இறக்கி வடிகட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.

அதன்பின் புளியை தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தக்காளி போன்றவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பின் மீது கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். இவை நன்றாக பொரிந்ததும் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொண்டு, அவற்றுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து, எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து, நன்றாக கொதிக்க விட வேண்டும். பிறகு இதனுடன் புளி கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டு, அதனுடன் பாஸ்தா, ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து இவை அனைத்தும் ஒன்றாக கலந்து கெட்டியாகும் வரை பாத்திரத்தை மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் அப்படியே கொதிக்கவிட வேண்டும். பின்னர் மூடியை திறந்து கொத்தமல்லி இலைகளை தூவி விடவேண்டும்.

இந்தக் குழம்பை ஒருமுறை இவ்வாறு மசாலா அரைத்து, செய்து பாருங்கள். நிச்சயம் இவ்வளவு நாள் இது தெரியாமல் போய்விட்டதே,என்ற எண்ணம் தோன்றும் அளவிற்கு இதன் சுவை அவ்வளவு அற்புதமாகவும், சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்பொழுது புதியதொரு சுவையில், மீண்டும் மீண்டும் வேண்டும் என்று சாப்பிடத் தோன்றும்.