குழந்தைகள் வீட்டில் இருந்தாலே அட்டகாசமாக தான் இருக்கும். அவர்களை ஒரு இடத்தில் அமர்த்தி வைப்பது என்பது சவாலான காரியம் தான். அதிலும் இரண்டு, மூன்று குழந்தைகள் வீட்டில் இருந்தால் போதும், சொல்லவே வேண்டாம், அங்கு குறும்புத்தனம் மிக அதிகமாக இருக்கும். ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வார்கள். இவர்களை சிறிது நேரம் கூட நம்மால் கண்ட்ரோல் செய்ய முடியாது. ஆனால் குழந்தைகள் அனைவரும் ஒரே இடத்தில் அமைதியாக கொஞ்சம் நேரமாவது அமர்ந்திருக்க அவர்களுக்கு சாப்பிட எதையாவது கொடுக்க வேண்டும். அப்படி சாப்பிட கொடுக்கும் அந்த பொருள் அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருக்க வேண்டும். அப்படி குழந்தைகள் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு சுவை இனிப்பு சுவை. இந்த இனிப்புச் சுவையில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சுவையான பச்சைப்பயிறு போண்டாவை ஒருமுறை செய்து தான் கொடுங்களேன். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பச்சைப்பயறு – ஒரு கப், பச்சரிசி – ஒரு கப், வாழைப்பழம் – 4, வெல்லம் – முக்கால் கப், ஏலக்காய்த் தூள் – அரை ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 ஸ்பூன் எண்ணெய் – 200 கிராம்.
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு கப் பச்சை பயிரை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் ஒரு கப் பச்சை அரிசியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இவை இரண்டையும் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் நான்கு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துவிட வேண்டும்.
பிறகு இவற்றை இரண்டரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இவை நன்றாக ஊறிய பின்னர் இவற்றில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி, பச்சை பயறு மற்றும் அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் நான்கு வாழைப் பழங்களையும் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாவை ஒரு கிண்ணத்தில் சேர்க்க வேண்டும்.
பிறகு இதனுடன் அரை ஸ்பூன் ஏலக்காய் தூள், 2 ஸ்பூன் தேங்காய் துருவல் மற்றும் நன்றாகப் பொடித்த வெல்லம் முக்கால் கப் சேர்த்து கொஞ்சம் நேரம் கலந்துவிட வேண்டும். அப்போது தான் இதில் சேர்த்துள்ள வெல்லம் நன்றாகக் கரைந்து மாவுடன் ஒன்றாக சேர்ந்திருக்கும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து போண்டா போடுவது போல் எண்ணெயில் சின்ன சின்ன உருண்டைகளாக போடவேண்டும். சிறிது நேரத்தில் இவை நன்றாக சிவந்து பொரிந்து வரும். பின்னர் இவற்றை எண்ணெயில் இருந்து வெளியே எடுத்து சுடச்சுட பரிமாறி கொடுத்துப் பாருங்கள். நீங்கள் போதும் போதும் என்றாலும் குழந்தைகள் வேண்டும் வேண்டும் என விரும்பி சாப்பிடுவார்கள்.