எப்போது பார்த்தாலும் முருங்கைக்காய் வாங்கினால் சாம்பார் குழம்பு, வெங்காயம் தக்காளி போட்டு பொரியல் தானா. கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது சமைக்க முடியாதா என்று கேட்பவர்களுக்கு சூப்பரான முருங்கைக்காய் வறுவல் ரெசிபி. மணக்க மணக்க இந்த மசாலா பொடியை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். முருங்கைக்காய் வறுவல் மட்டுமல்ல கத்திரிக்காய் வதக்கல், கேரட் பீன்ஸ் பொரியல், புடலங்காய் பொரியல், என்று மற்ற காய்கறிகளுக்கும் இந்த பொடியை சேர்த்து சமைக்கும் போது சுவை கூடுதலாக இருக்கும். நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்க்கலாம் வாங்க.
முதலில் இந்த வறுவல் செய்வதற்கு ஸ்பெஷல் பொடியை அரைத்து விடுவோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் பொட்டுக்கடலை – 1 ஸ்பூன், வேர்க்கடலை – 2 ஸ்பூன், போட்டு லேசாக வறுக்க வேண்டும். இந்த இரண்டு பொருட்களும் பாதி அளவு வறுபட்டு வந்தவுடன் வரமிளகாய் – 6 சீரகம் – 1 ஸ்பூன் சேர்த்து பொன்னிறமாக கருக விடாமல் வறுத்து அடுப்பை அணைத்துவிட்டு, இதை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள். இந்த எல்லா பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, இந்த பொருட்களோடு 10 பல் – பூண்டு சேர்த்து கொரகொரப்பாக பொடி போல் அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடி அப்படியே இருக்கட்டும்.
அடுத்தபடியாக 6 லிருந்து 7 முருங்கைக்காய்களை சாம்பாருக்கு வெட்டுவது போல வெட்டி கழுவி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்திருக்கும் முருங்கைக்காய்களை எண்ணெயில் போட்டு ஒரு நிமிடம் போல நன்றாக வதக்கி விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு ஒரு மூடி போட்டு இந்த முருங்கைக்காய்களை எண்ணெயிலேயே வேகவைக்க வேண்டும். நான்கிலிருந்து ஐந்து நிமிடங்கள் மூடி போட்டு வேக வையுங்கள். இடையிடையே மூடியை திறந்து கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும். முருங்கை காய் நன்றாக வெந்தவுடன் கடையிலிருந்து முருங்கைக் காய்களை மட்டும் எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அந்த கடாயில் எண்ணெய் மீதம் இருக்கும் அல்லவா. அதோடு இன்னும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். இந்த எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் முருங்கைக்காய்களை வெங்காயத்துடன் சேர்த்து விடுங்கள். இப்போது வதக்கலுக்கு தேவையான அளவு உப்பு, மிளகாய்தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், போட்டு இந்த எல்லா பொருட்களையும் நன்றாக ஒரு நிமிடத்திற்கு கலந்து விடுங்கள். மிளகாய் தூள் பச்சை வாடை நீங்கட்டும்.
அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியில் இருந்து 2 டேபிள்ஸ்பூன் எடுத்து கடாயில் இருக்கும் முருங்கைக்காய் மேலே தூவி அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். முருங்கைக்காயில் மசாலா நன்றாக இறங்கும் வரை இரண்டு நிமிடம் போல சுருள சுருள முருங்கைக்காயை வதக்கி அடுப்பை அணைத்து சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள். இதனுடைய ருசி அசத்தலாக இருக்கும்.
வறுவல் செய்யும் போது எந்த இடத்திலும் தண்ணீர் ஊற்றி விடாதீர்கள். இந்த முருங்கைக்காய் வறுவலுடைய ருசி மாறிவிடும். தண்ணீர் ஊற்றாமல் முருங்கைக்காயை எண்ணெயில் வேக வைத்த தான் இந்த வறுவலை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.