தினமும் இட்லி, தோசை என்று இல்லாமல் சற்று வித்தியாசமான உணவுகளை செய்து கொடுத்தால் குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அப்படி பிரெட் வைத்து செய்யும் எந்த உணவு வகையாக இருந்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சாண்ட்விச், பிரட் டோஸ்ட், பிரட் மசாலா, பிரட் சில்லி, பிரட் ஆம்லெட் இது போன்ற உணவுகளை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. அவ்வாறு வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்தே இந்த பிரட் மசாலா டோஸ்ட்டை சட்டென செய்துவிடலாம். இவ்வாறு செய்து இரண்டு பிரட் துண்டுகளை சாப்பிட்டால் போதும் வயிறு முழுவதுமாக நிரம்பி விடும். இந்த அசத்தலான பிரட் மசாலா டோஸ்ட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
பிரெட் துண்டு – 10, பெரிய வெங்காயம் – 2, தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், கடலை மாவு – ஒரு கப், ரவை – கால் கப், கரம் மசாலா தூள் முக்கால் ஸ்பூன் மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், மிளகுத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 10 ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் இரண்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு, அதில் ஒரு கப் கடலை மாவில் சேர்க்க வேண்டும்.

பிறகு இதனுடன் கால் கப் ரவை மற்றும் உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், அரை டீஸ்பூன் மிளகுத்தூள், முக்கால் ஸ்பூன் கரம் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் அரை ஸ்பூன் சீரகம் இவை அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து விட வேண்டும்.
பின்னர் இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை இவை அனைத்தையும் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். இதில் ரவை சேர்த்துள்ளதால் சிறிது நேரத்தில் கெட்டி பதம் வந்துவிடும். எனவே சரியான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பின் மீது ஒரு தோசைக்கல்லை வைக்க வேண்டும். பின்னர் ஒரு பிரட் துண்டை இந்த கலவையில் நன்றாக நனைத்து, தோசைக்கல்லின் மீது போட்டு, எண்ணெய் ஊற்றி, சிவந்து வரும் வரை இருபுறமும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பிரட்டையும் இவ்வாறு மசாலாவை டோஸ்ட் செய்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான பிரட் மசாலா டோஸ்ட் தயாராகிவிடும்.