தினம் தினம் ஒரு குழம்பு, ஒரு பொரியல் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு வைத்த குழம்பை 2 நாட்களுக்கு கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் விருப்பமாக சாப்பிடமாட்டார்கள். தினமும் ஒரு புது வகையான குழம்பு செய்தால் மட்டுமே அவர்கள் முழுவதுமாக சாப்பிட்டு முடிப்பார்கள். அவ்வாறு தினமும் ஒரு குழம்பு செய்வதற்கு வீட்டில் எப்பொழுதும் காய்கறிகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் உடலிற்க்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய பயிறு வகைகளையும் வீட்டில் வைத்துக் கொண்டால், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த பயிறு வகைகளை சேர்த்து சுவையான குழம்பு செய்திடலாம். அதிலும் பயறு வகைகளுடன் மசாலா அரைத்து கறிக் குழம்பின் சுவையில் குழம்பு வைத்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் அப்படி சுவையான சுண்டல் குழம்பை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கருப்பு கடலை – கால் கிலோ, சின்ன வெங்காயம் – 20, தக்காளி – மூன்று, தேங்காய் – கால் மூடி, மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன் தனியா தூள் – இரண்டரை ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், எண்ணெய் – 6 ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதல் நாள் இரவே கருப்பு கடலையே ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிக்கொண்டு, மறுபடியும் அதனுடன் தண்ணீர் சேர்த்து எட்டு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். பிறகு மறுநாள் இந்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் 5 அல்லது 6 டம்ளர் தண்ணீர் சேர்த்து, அரை ஸ்பூன் உப்பு சேர்த்து இவற்றை குக்கரில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் மீது வைத்து 4 விசில் வரும் வரை கடலையை வேக வைக்கவேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதில் கடாய் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதனுடன் 15 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். பிறகு கால் மூடி தேங்காயைத் துருவி சேர்க்கவேண்டும்.
இவை இரண்டும் நன்றாக வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு இவற்றுடன் 2 ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டரை ஸ்பூன் தனியாத்தூள் சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றை ஆற வைத்த பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 3 தக்காளியை நறுக்கி மிக்ஸியில் சேர்த்து அதனையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள அனைத்து விழுதுகளையும் வேகவைத்த சுண்டலுடன் சேர்த்து கலந்து விடவேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்துவிட்டு, குக்கரை மீண்டும் அடுப்பின் மீது வைத்து கொதிக்க விட வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு தாளிக்கும் கரண்டியை வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்கிக் கொண்டு, அரை ஸ்பூன் மிளகாய்தூள் சேர்த்து அதனையும் வதக்கி குழம்புடன் சேர்த்து கலந்து விடவேண்டும்.