முருங்கைக்காயை வைத்து சாம்பார் வைக்கலாம். குழம்பு வைக்கலாம். மிஞ்சிப்போனால் வெங்காயம் தக்காளி போட்டு முருங்கைக்காய் தொக்கு செய்யலாம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் மசாலா பொருட்களை அரைத்து ஊற்றி முருங்கைக்காய் கிரேவி எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படி கிரேவி செய்தால் இதை சுடச்சுட சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி, வெரைட்டி ரைஸ்க்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். வாங்க நேரத்தைக் கடத்தாமல் ரெசிபிக்குள் செல்வோம்.
இந்த கிரேவி செய்ய முதலில் 2 முருங்கைக்காய்களை எடுத்து சாம்பாருக்கு வெட்டுவது போல வெட்டி கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம் – 1/2 ஸ்பூன், சேர்த்து பொரிந்து வந்ததும் மிகப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் – 1, சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள்.
வெங்காயம் வதங்கி வந்தபிறகு இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவேண்டும். இஞ்சி பூண்டு விழுதை பச்சை வாடை போக வதக்கி, மீடியம் சைஸ் தக்காளி – 2 மிக்ஸியில் போட்டு அரைத்து கடாயில் ஊற்றி கொள்ள வேண்டும். தக்காளியின் பச்சை வாடை போகும் வரை வதக்கி விட்டு மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், சேர்த்து மீண்டும் இந்த மசாலா பச்சை வாடை போகும் வரை வதக்கி, வைத்திருக்கும் முருங்கைக்காயை கடாயில் இருக்கும் மசாலாவோடு போட்டு நன்றாக கலந்து விட்டு அடுப்பை சிம்மில் வைத்து விட்டு ஒரு மூடி போட்டு முருங்கைக்காயை வேகவைக்க வேண்டும். முருங்கைக்காய் கால்வாசி வேகட்டும்.
இதற்குள் இந்த கிரேவிக்கு ஒரு அரவையை தயார் செய்ய வேண்டும். மற்றொரு கடாயை பக்கத்து அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். இதில் வேர்க்கடலை – 1 டேபிள்ஸ்பூன், வரமல்லி – 1 ஸ்பூன், பட்டை – மிக சிறிய துண்டு 1, ஏலக்காய் – 1, கிராம்பு – 1, தேங்காய் துருவல் – 1 டேபிள்ஸ்பூன், கசகசா – 1 ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் போட்டு மணக்க மணக்க கருக விடாமல் வறுத்து நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதுபோல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். (தேங்காய் நிறைய சேர்த்து விடக்கூடாது.)
இதற்குள் கடாயில் வெந்து கொண்டிருக்கும் முருங்கைக்காய் பாதி அளவு வெந்தவுடன் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் இந்த விழுதை கடாயில் இருக்கும் முருங்கைக்காயோடு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, மிதமான தீயில் இந்த கிரேவியை கொதிக்க விடுங்கள். அடுப்பை சிம்மில் வைத்து விட்டு ஒரு மூடி போட்டு மூடி விட வேண்டும். (கிரேவியின் பச்சை வாடை நீங்கி வருவதற்குள், முருங்கைக்காயும் நன்றாக வெந்து வந்துவிடும்.)
அவ்வளவு தான். கிரேயில் நாம் ஊற்றிய எண்ணெய் அப்படியே மேலே திரிந்து வரும். அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லி தழைகளைத் தூவி பரிமாறினால் சூப்பரான முருங்கைக்காய் மசாலா கிரேவி ரெடி. உங்களுக்கு இந்த ரெமெடி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.