காலை எழுந்ததும் முதலில் டீ அல்லது காபி குடிப்பது தான் பலரது பழக்கமாக இருக்கிறது. அதன் பின்னர் தான் காலை உணவை சாப்பிடுவாள். ஒரு சிலர் அதனையும் சாப்பிடாமல் அவசர அவசரமாக வேலைக்கு சென்று விடுவார்கள். இவ்வாறு காலை வேளையில் மிகவும் நேரம் குறைவாக இருப்பதால் பலருக்கும் சாப்பிட தோன்றுவதில்லை. ஆனால் காலை உணவை சாப்பிடாமல் இருப்பது உடம்பிற்கும் நல்லதல்ல. எனவே கொஞ்சமாவது காலை உணவை சாப்பிட்டுத்தான் வேண்டும். அதற்கு சட்டென்று செய்யக்கூடிய இந்த பிரட் ரெசிபி போதும். இதனை இரண்டு விதமான சுவையில் மிகவும் சுலபமாக செய்திட முடியும். இவ்வாறு பிரட் வைத்து செய்யப்படும் இந்த உணவை எவரும் வேண்டாம் என்று சொல்லாமல் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த ரெசிபியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பிரட் – 10 துண்டுகள், முட்டை – 10, உப்பு – அரை ஸ்பூன், சர்க்கரை – 7 ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், மிளகுத் தூள் – ஒரு ஸ்பூன், நெய் – 5 ஸ்பூன்.
பிரட் ரெசிபி: 1
முதலில் ஒரு அகன்ற கிண்ணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் அரை ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து விட வேண்டும்.
முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும். அதன் பின்னர் ஒரு ஃபோர்க் ஸ்பூன் அல்லது பீட்டர் வைத்து முட்டை மற்றும் சேர்த்துள்ள மசாலாவை நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு தோசைக்கல்லை வைக்க வேண்டும்.
தோசைகல் நன்றாக சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். பிறகு ஒவ்வொரு துண்டு பிரட்டாக எடுத்து இந்த முட்டை மசாலாவில் நன்றாகத் தோய்த்தெத்து, அதன் பின்னர் தோசைக்கல்லில் போட்டு, சிவந்து வருமாறு வறுத்து விட்டு பரிமாறி கொடுக்க வேண்டும்.
பிரட் ரெசிபி: 2
முதலில் ஒரு வாயகன்ற கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். அதில் 8 ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து சர்க்கரையை நன்றாக கரைத்து விட வேண்டும். பிறகு இதனுடன் ஐந்து முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும். பின்னர் முட்டை பீட்டர் அல்லது ஒரு ஃபோர்க் ஸ்பூன் வைத்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு தோசைக்கல்லை வைக்க வேண்டும். அதன் பின்னர் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து தடவி விட வேண்டும். பிறகு ஒவ்வொரு துண்டு பிரட்டாக எடுத்து, முட்டை கலவையில் நன்றாக நனைத்து, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் சிவந்து வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். பிறகு சுட சுட பரிமாறி கொடுத்தால் போதும், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.